ராஜஸ்தானில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநில அரசியலை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி, தேர்தலில் வென்றதாக சரித்திரமே இல்லை. பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது.


ராஜஸ்தான் அரசியல்:


ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், இந்த முறை ஆட்சியை தக்க வைக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், ராஜஸ்தான் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட், முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே நிலவும் அதிகார போட்டி நிலவி வருகிறது.


இதை தீர்க்க காங்கிரஸ் மேலிடம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வரவிருக்கும் தேர்தலில் பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்தும் ராஜஸ்தானில் நிலவும் உட்கட்சி பூசலை தீர்த்து வைக்கும் நோக்கிலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர்.


காங்கிரஸ் மேலிடம் போட்ட உத்தரவு:


இதில், வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு ஒற்றுமையுடன் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.


இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஆலோசனையின்படி அசாக் கெலாட் உடனான மோதலை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த விரிவான பேட்டியில், "சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூட்டுத் தலைமைதான் ஒரே வழி. 


எல்லாத்தையும் மறந்துவிட்டு முன்னேறி செல்லுமாறு கார்கே அறிவுரை வழங்கினார். இது ஒரு கட்டளையைப் போலவே ஒரு ஆலோசனையாகவும் இருந்தது. அசோக் கெலாட் என்னை விட மூத்தவர். அனுபவம் அதிகம். அவர் தோள்களில் பெரும் பொறுப்புகள் உள்ளன. நான் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, ​​அனைவரையும் அரவணைத்து அழைத்து செல்ல முயற்சித்தேன். 


இன்று அவர் முதலமைச்சராக (கெஹ்லாட்) இருக்கிறார். எனவே, அவர் அனைவரையும் அரவணைத்து அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார். கொஞ்சம் முன்னும் பின்னுமாக இருந்தால் அது பெரிய பிரச்சினை இல்லை. ஏனென்றால், எந்த ஒரு தனி நபரையும் விட கட்சியும் பொதுமக்களும் தான் முக்கியம். எனக்கும் இது புரிகிறது அவருக்கும் புரியும்.


ஆலோசனை கூட்டத்தில் கடந்த காலம் திரும்பி வராது. எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார். மன்னித்துவிட்டு மறந்து விடுங்கள். முன்னேறி செல்லுங்கள் என்று கார்கே கூறினார். அது அனைவருக்கும் பொருந்தும். நான் அதை நம்புகிறேன்.


நாம் இப்போது முன்னேறி புதிய சவால்களை சந்திக்க வேண்டும். இந்த நாட்டிற்கு காங்கிரசு நல்லாட்சி தேவை. நாம் ராஜஸ்தான் மக்களின் ஆசியைப் பெற வேண்டும். அதைச் செய்ய நாம் ஒற்றுமையாக உழைத்து, மக்களும் கட்சித் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முன்னேற வேண்டும்" என்றார்.