பாஜக வேட்பாளர் பட்டியல் 2023:
ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக 3 மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கான பட்டியலை பாஜக இன்று அதாவது அக்டோபர் 9ஆம் தேதி வெளியிட்டது.
ராஜஸ்தானில் 41 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதேசமயம் சத்தீஸ்கரில் 64 வேட்பாளர்களும், மத்திய பிரதேசத்தில் 57 வேட்பாளர்களும் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது சத்தீஸ்கருக்கு ஏற்கனவே பாஜக தலைமை ஒரு பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேபோல், மத்திய பிரதேசத்திற்காக ஏற்கனவே பாஜக இரண்டு பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், இது மத்திய பிரதேசத்திற்கான மூன்றாவது பட்டியல் ஆகும்.
மத்திய பிரதேச மாநிலம் புத்னி தொகுதியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் போட்டியிடுவார் என பாஜக தலைமை வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, தாதியா தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
ராஜஸ்தானில் யார் யார் எங்கு போட்டியிடுகின்றனர்?
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் தொகுதியில் ராஜ்யசபா எம்.பி கிரோதிலால் மீனாவுக்கு போட்டியிடுவார் என பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. எம்.பி.க்கள் பகீரத் சவுத்ரி, பாலக்நாத், நரேந்திர குமார், தேவ்ஜி படேல் ஆகியோரும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஜெய்ப்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் போட்டியிடுவார் என தெரிவித்துள்ளது பாஜக மேலிடம்.
ராஜஸ்தானில் இதுவரை பா.ஜ.க. வெற்றி பெறாத 19 இடங்கள் உள்ளன. கடந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. வசுந்தரா ராஜேவின் நெருங்கிய நம்பிக்கையாளரான நர்பத்சிங் ராஜ்விக்கு வாய்ப்பு இம்முறை ரத்து செய்த பாஜக, வித்யாதர் நகர் தொகுதியில் தியா குமாரியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் இருந்து 3 எம்.பி.க்களுக்கு வாய்ப்பு
சத்தீஸ்கரில் இருந்து 3 எம்.பி.க்களுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. பாஜக தலைமை வெளியிட்டுள்ள பட்டியலில் மிகவும் அதிர்ச்சிகரமான பெயர் சாஜாவைச் சேர்ந்த ஈஸ்வர் சாஹுவின் பெயர். இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஈஸ்வர் சாஹுவின் மகன் கொலை செய்யப்பட்டார். முன்னாள் ஆட்சியர் ஓ.பி.சௌத்ரி ராய்கரில் போட்டியிடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். சத்தீஸ்கர் பாஜக மாநில தலைவர் அருண் சாவ் லோர்மி தொகுதியில் களம் இறங்குகிறார். முன்னாள் முதல்வர் ராமன் சிங் ராஜ்நந்த்கான் தொகுதியில் போட்டியிடுகிறார்.
சத்தீஸ்கரைப் பொறுத்தவரையில் ஏ.பி.பி. சி- வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும் இடையில் கடுமையான போட்டி நடைபெறும் என்றும், காங்கிரஸ் ஆட்சி அமைக்கவே வாய்ப்புகள் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தேர்தலுக்கு முன்னதாக நடைபெறவுள்ள ஐந்து மாநிலத் தேர்தல் முடிவின் தாக்கம் வெளிப்படும் என்பதால், பாஜக மிகத் தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் தங்களது தேர்தல் வேலைகளை சூடாக்கியுள்ளது.