பாஜகவின் கோட்டையாக இருந்த சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம்தான் சத்தீஸ்கர். இந்த உருவாக்கப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்றது.

  


சத்தீஸ்கர் அரசியல் நிலவரம்:


2003ஆம் ஆண்டுக்கு பிறகு, 2018ஆம் ஆண்டு வரை, பாஜகவின் கோட்டையாக இருந்தது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்று பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.


காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகல் தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இச்சூழலில், சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?


இந்த நிலையில், ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 45 முதல் 51 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல, பிரதான எதிர்க்கட்சியான பாஜக, 39 முதல் 45 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள், 2 இடங்களில் வெற்றிபெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. முதலமைச்சராக யார் வேண்டும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகல் முதலமைச்சராக தொடர வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


இன்னும் 6 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சத்தீஸ்கரில் இருக்கும் 11 தொகுதிகள் பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு, பழங்குடியின மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதால் அவர்களின் வாக்குகளை கவரும் வகையில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.


கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலை தவிர, மற்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவே பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதையும் படிக்க: Five State Elections: மக்களவை தேர்தலுக்கான செமி பைனல்.. ஐந்து மாநில தேர்தல் தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்