மத்திய அரசு நாட்டின் ரயில்வே துறையை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அரசின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசியுள்ளார்.


3 ஆயிரம் புதிய ரயில்கள்:


இதுதொடர்பாக, அவர் பேசியதாவது, “மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் புதியதாக 3 ஆயிரம் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்திற்காக பணியாற்றி வருகிறது. தற்போதுள்ள பயணிகளின் எண்ணிக்கையான 800 கோடியை ஆயிரம் கோடியாக அதிகரிக்க உள்ளோம். இது அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றப்படும்.


ரயில்களில் பயணிக்கும் நேரத்தை குறைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இழு – தள்ளு முறையில் இது சாத்தியமாகும். இந்த முறையை அனைத்து பெட்டிகளிலும் கொண்டு வர திட்டமிட்டு வருகிறோம். நீண்ட தூர ரயில்கள் நவீனப்படுத்தப்பட்டு பயண நேரம் குறைக்கப்படும்.


1000க்கும் மேற்பட்ட மேம்பாலங்களும், சுரங்கப்பாதைகளும் கட்டவும், கட்டுமான பணிகளும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு 1002 மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டது. இந்தாண்டு 1200-ஆக இலக்கு நிர்ணயித்துள்ளோம்.”


இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வந்தே பாரத் ரயிலுக்கு முக்கியத்துவம்:


மேலும், ரயில்வே வட்டாரங்களில் வெளியான தகவலாக ஆங்கில ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் ரயில்வே துறை 200 முதல் 250 கூடுதல் ரயில்களை ஆண்டுதோறும் உருவாக்கும் என்றும், இனி வரும் ஆண்டுகளில் 400 முதல் 450 வந்தே பாரத் ரயில்களும் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


கொரோனா காலகட்டத்தில் இயக்கப்பட்ட 562 ரயில்கள் தற்போது தினசரி ரயில்களாக இயக்கப்பட்டு வருகிறது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1768ல் இருந்து 2 ஆயிரத்து 122 ரயில்களாக உயர்த்தப்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் 5 ஆயிரத்து 626 ரயில்களில் இருந்து 5 ஆயிரத்து 774 ரயில்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில் 2 ஆயிரத்து 792 ரயில்களில் இருந்து 2 ஆயிரத்து 852 ரயில்களாக இயக்கப்படுவதாகவும், தினசரி நாடு முழுவதும் 10 ஆயிரத்து 748 ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில்களை இயக்கப்போவதாக மத்திய அமைச்சர் கூறியிருப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், புதியதாக இயக்கப்படும் ரயில்களின் கட்டணங்கள் சாமானியர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றும், சொகுசு ரயில்களான வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களால் ஏற்கனவே அதிகளவில் மக்கள் பயன்படுத்தும் சாதாரண ரயில்களின் பயண நேரங்கள் பாதிக்காத வகையிலும் செயல்படுத்த வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


மேலும் படிக்க: ஈட்டியின் முனைகளே.. எழுங்கள்! கட்டிய நாய்களல்ல நாம்...- பொங்கி எழுந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


மேலும் படிக்க: MP Chhattisgarh Election LIVE: மந்தம்.. மதியம் 1 மணி நிலவரம்.. சத்தீஷ்கரில் 37% - மத்திய பிரதேசத்தில் 45.40% வாக்குப்பதிவு