காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இரண்டு நாள் இடைவெளிக்கு பிறகு இன்று பிற்பகல் மீண்டும் தனது பயணத்தை தொடங்குகிறது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக கடந்த ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கிய காங்கிரஸின் நியாய யாத்திரை கடந்த 25ம் தேதி மேற்கு வங்கம் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள ஃபலகட்டாவுக்கு சென்றடைந்தது. தொடர்ந்து யாத்திரையில் பங்கேற்ற ராகுல் காந்தி ஜனவரி 26 மற்றும் 27 ம் தேதிகளில் இரண்டு நாள் ஓய்வுக்காக டெல்லி புறப்பட்டார். 


இந்தநிலையில், இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு ஜல்பைகுரியில் இருந்து அடுத்த கட்ட யாத்திரையை ராகுல் காந்தி இன்று தொடங்க உள்ளார். ஜல்பைகுரியில் தொடங்கும் யாத்திரை சிலிகுரி, டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி மற்றும் வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் வரை சென்றடைகிறது. 


மம்தா பானர்ஜி பங்கேற்பா..?


இந்த நியாய யாத்திரையில் சிபிஐ (எம்) மற்றும் இடதுசாரி கட்சிகளும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், யாத்திரையில் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளுமா என முழுவதுமாக தெரியவில்லை. முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, “ராகுல் காந்தி வருவதை நான் அறியவில்லை. காங்கிரஸ் கட்சி ஒரு மரியாதைக்காவது மேற்கு வங்கத்திற்கு வருகை தருவதாக என்னிடம் கூறினார்களா? ”என்று தெரிவித்தார். 


அதேபோல், இந்தியா கூட்டணியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடந்த புதன்கிழமை தனது கட்சி வரவிருக்கும் மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் என்று அறிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு அகில இந்திய காங்கிரஸுக்கு அடியாக கருதப்படுகிறது. 


ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் நியாய யாத்திரை, 67 நாட்களில் 15 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்கள் (6, 713 கி.மீ) கடந்து மார்ச் 20ம் தேதி மும்பையில் நிறைவடைகிறது.


மம்தாவுக்கு கோரிக்கை வைத்த கார்கே: 


ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று மேற்கு வங்கத்தில் இருந்து மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் ஒன்றை நேற்று எழுதினார். அதில், “நடைபயணத்தில் உள்ள காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும், தொண்டர்களுக்கும், ராகுல் காந்திக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். அசாமில் நடைபயணம் சில பிரச்சனைகளை சந்தித்த நிலையில் சில தவறான ஆட்களால் நடைபயணத்திற்கு தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நடைபயணம் பாதுகாப்பான முறையில் நடப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ராகுல் காந்தி குடும்பத்துடன் உங்களுக்கு இருக்கும் அன்பான உறவைப் பற்றி நன்கு அறிவேன். நடைபயணம் பாதுகாப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் நீங்கள் உடனடியாக செய்வீர்கள் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் கடிதம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுப்பது சிறப்பாக அமையும் என எண்ணுகிறேன்.


பாஜக உருவாக்கியுள்ள ஜாதி, மத மத பிரிவினைகளைத் தளர்த்தி மக்களை ஒன்றாக்குவதே இந்த நடைப்பயணத்தின் குறிக்கோளாக ராகுல் காந்தி எப்போதும் கருதுகிறார். இந்த நாட்டில் பலவீனமாக இருப்பவர்களுக்கும் சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும்  அரசியல் நீதிகளைப் பெற்றுத் தருவதே இதன் நோக்கம். அதனால்தான் இந்த அரசியலற்ற முயற்சி பலகோடி இந்திய மக்களை ஈர்த்துள்ளது. மக்களிடையே உருவாக்கப்பட்டுள்ள சாதி மத பாகுபாட்டினை அறுத்தெறிந்து அனைவருக்குமான மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்குவதே இதன் நோக்கம்” என தெரிவித்திருந்தார்.