தூத்துக்குடி அருகே நடைபெற்ற அசன விருந்தில் மண்வெட்டி கொண்டு சாப்பாடு பரிமாறப்பட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தில் சிறப்பூர் பரிசுத்த பவுலின் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆலய பிரதிஷ்டை நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெறும் அசன விருந்து மிகவும் பிரபலமானது. அந்த வகையில் பரிசுத்த பவுலின் ஆலயத்தின் 167வது பிரதிஷ்டை பண்டிகை நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்திருந்தனர். 


10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் இரவில் பட்டிமன்றம், மாணவ- மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், நற்செய்தி கூட்டம், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றது. இந்த விழாவில் சிகர நிகழ்ச்சியான ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன விருந்து நேற்று நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு அசன  விருந்து தொடங்கிய நிலையில் இரவு வரை தொடர்ந்து நடைபெற்றது. இந்த விருந்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.


மேலும் அசன விருந்துக்காக பிரம்மாண்டமான முறையில் சமையல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி 4 டன் அரிசி , 2 டன் பருப்பு, 6 டன் காய்கறி, 500 கிலோ பட்டாணி கொண்டு மிகப்பெரிய அண்டாவில்  உணவு தயார் செய்யப்பட்டு மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. பிரார்த்தனைக்குப் பின் இந்த உணவானது  அசனப் பண்டிகைக்கு வந்திருந்த அனைவருக்கும் பந்தியில் பரிமாறப்பட்டது. வந்த அனைவரும் உணவை ரசித்து ருசித்து சாப்பிட்டனர். 


இதனிடையே அங்கு சமைக்கப்பட்டிருந்த உணவை மண்வெட்டியை கொண்டு அங்கிருந்த ஆலய நிர்வாகிகள் அள்ளி அள்ளி பந்திக்கு கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதோடு மட்டுமல்லாது விழாவில் பங்கேற்ற சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவர்களின் வீடுகளுக்கும் தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரத்தில் உணவை  வாங்கி சென்றனர்.  இதனைத் தொடர்ந்து இரவில் வாணவேடிக்கையும் நடைபெற்றது.