சுமார் 125 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியா, உலக நாடுகளின் பார்வையில் மிகப்பெரிய வர்த்தக சந்தையாகும். உலகளாவில் மிகப்பெரிய வர்த்தகமான மருத்துவத்தில், இந்தியா தவிர்க்க முடியாத சந்தையாக உள்ளது. இதனால், இந்தியாவில் போலியான மருந்துகளும், மருத்துவ பொருட்களும் புழக்கத்தில் இருந்து வருகிறது. இதைத்தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.


தற்போது, ஆன்லைன் வாயிலாகவும் மருந்து பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால், மருந்து பொருட்களின் தரம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வது அரசின் அதீத கடமையாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி மருந்துகளின் தரம் பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புதிய நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.




இதன்படி, நாட்டில் அதிகளவில் விற்பனையாகும் மருந்து பொருட்களை கண்காணிக்கும் வகையில் டிராக் மற்றும் டிரேஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டப்படி, மருந்து பொருட்களின் மீது க்யூ ஆர் கோடு அமைக்கப்பட உள்ளது. இந்த க்யூ ஆர் கோடை மருந்து பொருட்களை வாங்குபவர்கள் ஸ்கேன் செய்யும் போது, அந்த மருந்தை பற்றிய தகவல், அந்த மருந்தின் பயன்பாடு உள்ளிட்ட முக்கிய விவரங்களை பயனாளர்கள் அறிய முடியும்.


முதற்கட்டமாக நாட்டில் அதிகளவில் விற்பனையாகும் 300 மருந்துகளில் இந்த க்யூ ஆர் கோடு நடைமுறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகமும் மருந்து பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் மருந்து பொருட்கள் மீது பார்கோடு அல்லது க்யூ ஆர் கோடு அச்சடித்து தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.




இந்த திட்டம் மூலம் போலி மருந்துகளின் பயன்பாட்டை சந்தையில் தடுத்து நிறுத்த முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பேரிடருக்கு பின்பு மருத்துவத்துறையின் தேவை ஏற்கனவே இருந்ததை காட்டிலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. 


மேலும் படிக்க :  "வெளியில் தெரியாமல் பெரும் கடன்களை தள்ளுபடி செய்யும் இடம்தான் ஐபிசி!", நிர்மலா சீதாராமனுக்கு சிதம்பரம் பதிலடி


மேலும் படிக்க : HDFC Lending Rate Hike: HDFC வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது ஏன் தெரியுமா?