பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் தேர்வுக்குத் தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்று (அக்டோபர் 4ஆம் தேதி) கடைசி நாள் ஆகும்.
மத்திய அரசு சார்பில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) என்னும் உயர் கல்வி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி. உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.
ஆண்டுதோறும் நடைபெறும் கேட் தேர்வை ஐ.ஐ.டி. நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐ.ஐ.எஸ்.சி. எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்துகின்றன. இந்த ஆண்டு கேட் தேர்வை ஐ.ஐ.டி. கான்பூர் நடத்துகிறது.
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2023-24ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
யாரெல்லாம் எழுதலாம்?
கேட் 2023 தேர்வை, பொறியியல் பட்டதாரிகளும் கடைசி ஆண்டு மாணவர்களும் எழுதலாம். பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல், அறிவியல், வணிகம் மற்றும் கலைப் பிரிவு பட்டதாரிகளும் இந்தத் தேர்வை எழுதத் தகுதியானவர்கள். தற்போது பிடிஎஸ் மற்றும் எம்ஃபார்ம் படிப்பு படித்தவர்களும் கேட் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு
கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து கால அவகாசம் இன்று (அக்டோபர் 4ஆம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டது.
எனினும் விண்ணப்பிப்பதற்கான தேதி தாமதக் கட்டணத்துடன், அக்டோபர் 7ஆம் தேதி வரை உள்ளது. ஜனவரி 3ஆம் தேதி முதல் தேர்வர்கள் ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் 16ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்வர்கள் gate.iitk.ac.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.
* “Apply Online” என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* கேட்டிருக்கும் அனைத்துத் தகவல்களையும் பூர்த்தி செய்யவும்.
* கேட் தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, தேவையான தகவல்களை நிரப்பவும்.
* கட்டணத்தைச் செலுத்தி, சப்மிட் பொத்தானை சொடுக்கவும்.