இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி சேவை வழங்கும் நிறுவனமான HDFC, கடன்களுக்கான வட்டி வகிதத்தை உயர்த்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு:
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் கடந்த புதன்கிழமை செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக, ரூபாய் மதிப்பை வலுப்படுத்தும் நோக்கிலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலும் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வையடுத்து, மும்பை பங்குச் சந்தை நேற்று ஏற்றம் கண்டது. இதையடுத்து சில வணிக வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
HDFC அறிவிப்பு:
இந்நிலையில் HDFC வங்கியானது கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மேலும் 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் வீட்டு கடன்களுக்கான இஎம்ஐ உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் ஹச்டிஎஃப்சி வங்கியானது 7வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சரி, ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் சூழல் ஏன் ஏற்படுகிறது என தெரிந்து கொள்வோம்.
ரெப்போ வட்டி விகிதம் என்பது, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கக்கூடிய கடன்களுக்கான வட்டி விகிதம் ஆகும். ஆகையால் ரெப்போ விகிதம் உயருவதால், ரிசர்வ் வங்கியிடம் இதர வங்கிகள் வாங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமும் உயர்கிறது.
அதன் காரணமாக இதர வங்கிகள், மக்களிடம் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துகிறது. மக்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதும், குறைப்பதும் வங்கிகளின் முடிவாகும். ஆகையால் ஒரு வங்கியிடமிருந்து மற்றொரு வங்கிக்கு கடன்களுக்கான வட்டி விகிதம் மாறுபடுகிறது.
இந்நிலையில், ஹச்டிஎஃப்சி வங்கியானது கடன்களுக்கான வட்டி விகிதத்தை மேலும் 0.50 சதவீதத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வானது, இன்று ( அக்டோபர் 1) முதல் அமலுக்கு வருவதாக ஹச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து, இதர வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் எனவும் எதிர்பார்க்கலாம்.