Wayanad: வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வடஇந்தியாவில் ஒரு தொகுதியிலும் தென் இந்தியாவில் ஒரு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் கிட்டத்தட்ட 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் 3 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.


தேர்தல் அரசியலில் குதிக்கும் பிரியங்கா காந்தி: அரசியல் சாசன விதிகளின்படி, ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளிலும் எம்.பி.யாக தொடர முடியாது. எனவே, ஏதேனும் ஒரு தொகுதியில் இருந்து எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எந்த தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்? ராஜினாமா செய்யும் தொகுதியில் யார் போட்டியிடுவார்? என்பது பெரும் கேள்விகளாக இருந்தன.


அதற்கு இன்று விடை கிடைத்துள்ளது. வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். அந்த தொகுதியில் பிரிங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.


வயநாட்டில் போட்டியிடுவதன் மூலம் தேர்தல் அரசியலில் முதல்முறையாக களமிறங்குகிறார் பிரியங்கா காந்தி. இதுகுறித்து அவர் பேசுகையில், "வயநாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வயநாட்டில் ராகுல் காந்தி இல்லாத வெறுமையை உணர விடமாட்டேன்.


நான் கடினமாக உழைத்து, அனைவரையும் மகிழ்வித்து, நல்ல பிரதிநிதியாக இருக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன். ரேபரேலி மற்றும் அமேதியுடன் எனக்கு மிகவும் பழைய உறவு உள்ளது. அதை உடைக்க முடியாது. ரேபரேலியில் உள்ள என் சகோதரனுக்கும் உதவுவேன். நாங்கள் இருவரும் ரேபரேலி மற்றும் வயநாட்டில் இருப்போம்" என்றார்.


உருக்கமாக பேசிய ராகுல் காந்தி: வயநாட்டில் தனது சகோதரி பிரியங்கா போட்டியிடுவது குறித்து பேசிய ராகுல் காந்தி, "பிரியங்கா காந்தி முதல்முறையாக தேர்தலில் போட்டியிடப் போகிறார். அவர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று நான் நம்புகிறேன். தங்களுக்கு 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என வயநாட்டு மக்கள் நினைத்து கொள்ளலாம்.


ஒருவர் எனது சகோதரி, இன்னொருவர் நான் என்று நினைத்து கொள்ளலாம். வயநாட்டு மக்களுக்காக எனது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். வயநாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன்" என்றார்.


இதையும் படிக்க: வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி.. ரேபரேலி எம்.பி.யாக தொடர முடிவு!