வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் ராகுல் காந்தி. ரேபரேலி தொகுதி எம்.பி.யாக தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ளார்.


ராகுல் காந்தி எடுத்த முடிவு: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வடக்கில் ஒரு தொகுதி, தெற்கில் ஒரு தொகுதி என இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். வயநாடு, ரேபரேலி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டிலும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தார்.


ஆனால், அரசியல் சாசன விதிகளின்படி, ஒருவரால் இரண்டு தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் எம்.பி.யாக இருக்க முடியாது. எனவே, வென்ற இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதி எம்.பி. பதவியை அவர் ராஜினாமா வேண்டி உள்ளது.


எந்த தொகுதி எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளார் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் நாடு முழுவதும் மோசமான தோல்வியை சந்தித்தது.


ஆனால், கேரளா மாநிலம்தான் காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுத்தது. அந்த தேர்தலில், உத்தர பிரதேசம் மாநிலம் அமேதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் ராகுல் காந்தி வயநாட்டில் வெற்றி பெற்றார். எனவே, இக்கட்டான சூழலில் தன்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய கேரள மக்களுடன் அவர் உணர்வுப்பூர்வமான பிணைப்பை கொண்டிருக்கிறார்.


ரேபரேலி தொகுதி எம்.பி.யாக தொடர காரணம் என்ன? இருப்பினும், நாட்டிலேயே அதிகப்படியான மக்களவை தொகுதிகளை கொண்டுள்ள உத்தரப் பிரதேசத்தில் இருந்து அவர் எம்பியாக தொடர்வதுதான் அரசியல் ரீதியாக சரியான முடிவாக இருக்க முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகினர்.


அதோடு, ரேபரேலி தொகுதிக்கும் ராகுல் காந்திக்கும் குடும்ப ரீதியாக ஒரு பிணைப்பு உள்ளது. ராகுல் காந்தியின் தாத்தா பெரோஸ் காந்தி தொடங்கி தாயார் சோனியா காந்தி வரை நேரு குடும்பத்தினர் பாரம்பரியமாக போட்டியிடும் தொகுதியாக ரேபரேலி உள்ளது.


ரேபரேலி பெரோஸ் காந்தி இரண்டு முறையும் இந்திரா காந்தி மூன்று முறையும் சோனியா காந்தி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதி என்பதாலும் அதன் அரசியல் முக்கியத்துவம் காரணமாகவும் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது.


அதன்படி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோருடன் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இந்த முடிவை அறிவித்துள்ளார்.


அதோடு, வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்வது குறித்து பேசிய ராகுல் காந்தி, "வயநாடு மற்றும் ரேபரேலியுடன் எனக்கு உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது.


கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு எம்.பி.யாக இருந்தேன். மக்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. பிரியங்கா காந்தி, வயநாட்டில் இருந்து தேர்தலில் போட்டியிடுவார். ஆனால், நானும் அவ்வப்போது வயநாட்டிற்கு வருவேன். ரேபரேலியுடன் எனக்கு பழைய உறவு உள்ளது. நான் அவர்களை மீண்டும் பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், இது கடினமான முடிவு" என்றார்.