மக்களவை தேர்தல் முடிந்து 2 வாரங்கள் கூட ஆகாத நிலையில், அடுத்த மிஷனுக்கு தயாராகியுள்ளது பாஜக. கடந்த ஜூன் 9ஆம் தேதிதான், மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். மத்தியில் புதிய அரசாங்கம் அமைந்து ஒரு வாரத்திலேயே, மாநில தேர்தலுக்கு வேலைகளை முடுக்கி விட்டுள்ளது பாஜக தலைமை.


அடுத்த மிஷனுக்கு தயாராகும் பாஜக: மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் (தற்போது யூனியன் பிரதேசமாக உள்ளது) ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், 4 மாநில தேர்தல்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது பாஜக தேசிய தலைமை.


அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக கருதப்படும் மகாராஷ்டிராவுக்கு இரண்டு மத்திய அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பொறுப்பாளராகவும் ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


ஹரியானா மாநிலத்திற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பாளராகவும் திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சர் விப்லப் குமார் தேவ் இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் தற்போது மத்திய விவசாயத்துறை அமைச்சராக உள்ள சிவராஜ் சிங் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளராக அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.


மத்திய அமைச்சர்கள் நியமனம்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் பொறுப்பாளராக நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள மாநில தேர்தலிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது மகாராஷ்டிராதான்.


மகாராஷ்டிராவில்தான் நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை அமைந்துள்ளது. உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்டுள்ளது. இதை எல்லாம் தாண்டி, புதிய கூட்டணி கட்சிகளுடன் மாநில தேர்தலை சந்திக்க உள்ளதால் பாஜகவுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது பாஜக.


கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிளவுபடாத சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து மொத்தம் 41 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியிருந்தது. பாஜக மட்டும் 23 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. காங்கிரஸ் மட்டும் 13 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது.