தமிழ்நாட்டுக்கும் குஜராத்துக்கும் இடையேயான கலாசார தொடர்பு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இதற்கு முக்கிய காரணம், சவுராஷ்டிராவில் இருந்து குடிபெயர்ந்து தமிழ்நாட்டில் தற்போது வாழ்ந்து வரும் மக்கள். கிட்டத்தட்ட 12 லட்சம் சவுராஷ்டிரியர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.


சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்:


இப்படி, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தொடர்பை வலுப்படுத்தும் விதமாக சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.


காசி தமிழ் சங்க நிகழ்ச்சியை போன்றே இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான லோகோ, தீம் பாடல், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்து கொள்வதற்கான போர்ட்டல் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. 


நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சேலத்தில் டாண்டியா நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சர் தர்ஷனா சர்தோஷ், குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜகதீஷ் விஸ்வகர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். 


இதுகுறித்து தர்ஷனா சர்தோஷ் ட்விட்டர் பக்கத்தில், "சேலத்தில் நடத்தப்பட்ட டாண்டியா நடன நிகழ்ச்சி சவுராஷ்டிரா தமிழ் மக்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின் வெளிப்பாடு. சேலத்தில் நடந்த சாலை பேரணியின்போது தமிழ்நாட்டு மக்களின் அன்பையும் அரவணைப்பையும் பெற்றோம்" என குறிப்பிட்டிருந்தார்.


நூற்றாண்டு பிணைப்பை வலுப்படுத்துகிறது: மோடி


இந்த ட்வீட்டை பகிர்ந்த பிரதமர் மோடி, "குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான பிணைப்பை சவுராஷ்டிரா தமிழ் சங்கம் வலுப்படுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளார்.


சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குறித்து முன்னதாக பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "வாழ்நாளில் அரிதிலும் அரிதான பந்த இணைப்பை வலுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சி இதுவாகும். இந்த திட்டம் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு சௌராஷ்டிரியர்களின் வரலாற்றை அறிய வாய்ப்பளிக்கும்.


ஜவுளி மற்றும் கைத்தறிகளை காட்சிப்படுத்துவதற்கான கண்காட்சிகள், கைவினைஞர்களின் சந்திப்புகள், வணிக நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன" என்றார்.


 






திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா பல்கலைக்கழகம் இணைந்து திட்டமிட்ட இந்த நிகழ்ச்சியை குஜராத் அரசு நடத்துகிறது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவை பிரபலபடுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 


மேலும் படிக்க: Madurai Metro: மதுரையில் மெட்ரோ ரயில்; விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் ஒதுக்கீடு