கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 24 மற்றும் 25 தேதிகளில் பிரதமர் மோடி அங்கு செல்கிறார். 
இதையடுத்து, அவர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டிருக்கிறது. மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டது தொடர்பான தகவல் ரகசியமாக வைக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக உளவுத்துறை அறிக்கை தற்போது கசிந்துள்ளது.


கொச்சியைச் சேர்ந்த ஒருவர் எழுதியதாகக் கூறப்படும் மலையாளத்தில் எழுதப்பட்ட கடிதம், கேரள மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரனின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அவர் அதை கடந்த வாரம் காவல்துறையிடம் ஒப்படைத்தார்.


ஏடிஜிபியின் (உளவுத்துறை) அறிக்கை ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டதை அடுத்து, மிரட்டல் கடிதம் குறித்த செய்தி இன்று வெளியாகியுள்ளது. செய்தி வெளியான நிலையில், சுரேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து, ஒரு வாரத்திற்கு முன்பு மாநில காவல்துறைத் தலைவரிடம் மிரட்டல் கடிதத்தை அளித்ததாக கூறினார்.


"தற்கொலை குண்டுதாரியை பயன்படுத்தி பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்தப்படும் என கேரள பாஜக மாநிலக் குழுத் தலைவருக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பப்பட்டது" என உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடிதத்தின் உண்மைத்தன்மை மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காவல்துறையினரிடம் இருந்து உளவுத்துறை அறிக்கை கசிந்தது மிகப்பெரிய தவறு என்றும் அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சுரேந்திரன் குற்றம் சாட்டினார். 49 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் பணியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர்கள், அவர்களின் பணிகள், பிரதமரின் விரிவான நிகழ்ச்சி விளக்கப்படம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.


ஏடிஜிபி (உளவுத்துறை) அறிக்கை கசிந்ததற்கு கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ள மத்திய இணை அமைச்சர் வி. முரளீதரன், "இது சீரியஸான விஷயம். பிரதமரின் பாதுகாப்பு விவரம் குறித்த அறிக்கை எப்படி கசிந்து வாட்ஸ்அப்பில் வைரலானது என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். இதனால், மாநில உள்துறை செயலிழந்துள்ளது தெரிய வந்துள்ளது" என்றார்.


மிரட்டல் கடிதத்தில் கொச்சியை சேர்ந்த என்.ஜே. ஜானியின் பெயரும் அவரது எண்ணும் இடம்பெற்றுள்ளது. ஆனால், தான் நிரபராதி என்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "போலீசார் என்னிடம் விசாரித்தனர். அவர்களிடம் அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளேன். அவர்கள் கையெழுத்து மற்றும் எல்லாவற்றையும் குறுக்கு சோதனை செய்தனர்" என்றார்.


உளவுத்துறை அறிக்கையின்படி, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி நகரங்களில் தலா 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க: RahulGandhi: விடாது துரத்தும் அவதூறு வழக்கு; சூரத் நீதிமன்றத்தை தொடர்ந்து பாட்னா நீதிமன்றம் அதிரடி - நெருக்கடியில் ராகுல்காந்தி..!