கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.


சூரத் நீதிமன்றம்:


ராகுல் காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக சூரத் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், தண்டனையை நிறுத்த வைக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.


தொடர் பின்னடைவுகளை சந்திக்கும் ராகுல் காந்தி:


அவதூறு வழக்கில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் ராகுல் காந்தி, அடுத்த சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். சூரத் நீதிமன்றத்தை தொடர்ந்து, பாட்னா நீதிமன்றத்திலும் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.


மோடியின் பெயர் தொடர்பான அதே அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. தற்போது, அந்த சம்மனை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் நீதிபதி சந்தீப் குமார் முன் குறிப்பிடப்பட்டது. ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை ஏப்ரல் 24ஆம் தேதி விசாரிக்க நீதிபதி ஒப்புக்கொண்டார்.


ராகுல்காந்திக்கு நோட்டீஸ்:


அவதூறு வழக்கில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு 313இன் கீழ் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, ஏப்ரல் 12ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த தேதியில் ராகுல் காந்தி ஆஜராகவில்லை. எனவே, கூடுதல் அவகாசம் கோரிய ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையின் பேரில், ஏப்ரல் 25 ஆம் தேதி ராகுல் காந்தியை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதையடுத்து, ராகுல் காந்தி பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால், எம்பிக்களுக்கு வழங்கப்படும் அரசு பங்களாவில் இருந்து ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. 


அரசு பங்களா காலி:


இதற்கிடையே, டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து, அதை மக்களவை செயலகத்திடம் இன்று ஒப்படைக்க உள்ளார் ராகுல் காந்தி. முன்னதாக, லாரி டிரக்கை கொண்டு அரசு பங்களாவில் இருந்த ராகுல் காந்தியின் பொருள்கள் எடுத்து செல்லப்பட்டது. ராகுல் காந்தியின் பொருள்கள் அனைத்தும் அவரது தாயார் சோனியா காந்தியின் வீட்டுக்கு மாற்றப்பட்டது.