Ayodhya: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


அயோத்தி ராமர் கோயில்:


உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்படுகிறது. 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 16.5 அடி உயரமும் கொண்ட இந்த திருக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டுமான பணிக்காக ரூ.1800 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.  இதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து துறை சார்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் அமைக்கப்பட்டு வரும் ராமர் கோயிலில் 70 ஆயிரம் பேர் வரை தரிசனம் செய்யலாம். திறப்பு விழாவில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். 


பிரதமர் மோடி ரோட்-ஷோ:


அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்ட பின்பு பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பதால் அவர்களின் வசதிக்காக புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.ரூ.1450 கோடி செலவில் நவீன வசதிகளுடன் விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ’மகரிஷி வால்மிகி சர்வதே விமான நிலையம்'  என பெயரிடப்பட்டுள்ளது.   அதேசமயம் அங்குள்ள ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு ’அயோத்தி தாம்' என்று  பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை திறப்பதற்காக காலை 10.45 மணிக்கு விமானம் மூலம் அயோத்தி வந்தார் பிரதமர் மோடி. அங்கிருந்த 15 கி.மீ., தூரத்துக்கு வாகன பேரணியாக சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு  அளித்தனர். பின்பு புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் சென்றார்.  






ரயில் நிலையத்தை திறந்து வைத்த பிரதமர்:


அயோத்தி ரயில் நிலையத்தில் 2 அம்ரித் பாரத் ரயில்கள், 6 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மத்திய அமைச்சர் அஷ்வ்ணி வைஷ்ணவ் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் சேர்ந்து, ரயில் நிலையத்தை பார்வையிட்டார். 240 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள அந்த ரயில் நிலைய்த்தில், பூஜை பொருட்களுக்கான கடைகள், ஆடை அறைகள், குழந்தை பராமரிப்பு அறைகள், காத்திருப்பு கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.


இதையடுத்து,  விமான நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட பொது கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அயோத்தி நகருக்கான திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்த புதிய விமான நிலையம் இன்று திறக்கப்படும் நிலையில், ஜனவரி 6ஆம் தேதி முதல் தான் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.  டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது . பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க: Vijayakanth: விசுவாசத்தின் மறுபெயரா மன்சூர்! விஜயகாந்த் இறந்த பின்பும் அவர் காலையே சுற்றி வந்த பாசக்காரன்!