தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவடைந்த நிலையில் அவருடைய மரணம் நடிகர் மன்சூர் அலிகானை வெகுவாக பாதித்துள்ளது. 


உடல்நலக்குறைவால் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவர் மறைவு சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் ஒரு கணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம் எந்த ஒரு நிலையிலும் யாராலும் விஜயகாந்த் வெறுக்க முடியாத மனிதராகவே திகழ்ந்தார். அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக வேறுபாடு இருந்தாலும் விஜயகாந்த் அனைவரிடத்திலும் ‘சொக்கத்தங்கம்’ ஆக திகழ்ந்தார். அவரின் மறைவு தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும். அதிலும் மன்சூர் அலிகானுக்கு சொல்ல முடியாத இழப்பாக மாறியுள்ளது. 


அதற்கு காரணம் 1990 ஆம் ஆண்டு மன்சூர் அலிகான் நடிகராக அறிமுகமாகி இருந்தாலும், 1991 ஆம் ஆண்டு வெளியான விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து ‘மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்’, ‘தாய்மொழி’, ‘ஏழை ஜாதி’ உள்ளிட்ட பல படங்களில் மன்சூர் அலிகான் விஜயகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். தன்னுடைய சினிமா வாழ்வில் ஏற்றத்திற்கு வழிவகுத்தவர் விஜயகாந்த் என்பதால் அவர் மீது மன்சூர் அலிகானுக்கு மாறா அன்பும், விசுவாசமும் உண்டு. அதனால் தான் ஒருமேடையில் கூட தனக்கு பிடித்த ஒரே நடிகர் விஜயகாந்த் என சொல்லியிருப்பார். 






கடந்த நவம்பர் மாதம் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கூட வருத்ததுடன் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே! நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்க நாயகனே! எதிர்நாயகனை அடிக்கவே விடாது பில்டப் செய்தும், டூப் போட்டும் சூப்பர்மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தாங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு உதை உதைப்பீர்களே அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்?” என தனது மன வருத்தத்தை பதிவிட்டிருந்தார். 


இந்நிலையில் தான் விஜயகாந்த் மரண செய்தி மன்சூர் அலிகானை நிலைகுலைய செய்துள்ளது. காலை 9 மணி அளவில் விஜயகாந்த் இறப்பு செய்தி வெளியானதும் அவர் நேரடியாக வீட்டுக்கே சென்று உடலை பார்த்து கதறி அழுதார். தொடர்ந்து கோயம்பேடு அலுவலகம், தீவுத்திடல் என பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட இடத்தில் எல்லாம் கண்ணீரும் கவலையுமாக துக்கம் தொண்டையை அடைக்க, யாரிடமும் சொல்ல முடியா துயரில் மன்சூர் அலிகான் இருந்ததை பலராலும் காண முடிந்தது. 


உண்மையில் விஜயகாந்தை ஒரு குருவாக பார்த்ததை விட உற்ற நண்பனாக பார்த்ததை விட சாமியாக மன்சூர் அலிகான் பார்த்தார் என்பது உண்மை. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டை சொல்லவேண்டுமானால் மன்சூர் அலிகான வீட்டு திருமண விழாவில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்போது விஜயகாந்துக்கு சற்று உடல்நலம் குன்றிய தருணம். அப்போது திருமணத்திற்கு விஜயகாந்த் வந்தது மன்சூர் அலிகானுக்கு அவ்வளவு ஆனந்தத்தை கொடுத்தாலும் விஜயகாந்தை அப்படி பார்த்த மன்சூருக்கு சொல்ல முடியாத வெளிகாட்ட முடியாது பெரிய துக்கமாகவே இருந்ததை அவரது முக பாவணைகள் அப்பட்டமாக காட்டிக்கொடுத்தது. அழுவாத குறையாகத்தான் அந்த நிகழ்ச்சி முழுக்க மன்சூர் விஜயகாந்துடன் பயணித்துருப்பார். அது விஜயகாந்த் மீதான அன்பு என்று சொல்வதைவிட அவர் மீதான பக்தி என்றுதான் சொல்ல வேண்டும். 


இந்த நிலையில்தான் விஜயகாந்தின் மரணம் மன்சூருக்கு பேரிடியாக விழுந்துள்ளது. குடும்பத்தில் ஏற்படும் மரணத்தை விட, அவர்களை விட நம்மை நன்கு அறிந்த நண்பர் மரணிக்கும்போது ஒருகணம் நம் எவருக்குமே இந்த உலகமே நின்றுபோகும். அப்படி ஒரு நிலைமையில் தான் மன்சூர் அலிகான் இருந்தார். விஜயகாந்த் உடல் அருகே மணிக்கணக்கில் இருந்தார். அதன் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகியது. 


அனைவரும், இறப்பதற்குள் “மன்சூர் அலிகான் போல ஒரு நண்பனை சம்பாதிக்க வேண்டும்” என வெளிப்படையாகவே தெரிவித்தனர். உண்மையில் பிரபலங்கள் இறப்பு நிகழும் போதெல்லாம் வெளியே தெரியாத உற்ற நண்பர்கள் எல்லாம் வெளிவருவார்கள். உண்மையில் அது நட்பு எல்லாம் தாண்டி எந்தவித வேறுபாடும் காட்டாத அந்த அன்புக்காக செய்யும் விசுவாசம் தான். அந்த வகையில் திரையில் வில்லனாக தெரிந்தாலும், நிஜத்தில் மன்சூர் அலிகான் விஜயகாந்துக்கு ஒரு நல்ல நண்பன், விசுவாசி. சீடன்..!