Assam Vande Bharat : அசாம் மாநிலத்தில் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


வந்தே பாரத் ரயில்


இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.


டெல்லியில் இருந்து புறப்பட்டு கான்பூர் – அலகாபாத் வழியாக வாரணாசி வரையில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே 2 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இதையடுத்து குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை இடையே 3வது வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இதுபோன்று நாடு முழுவதும் 17 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 


அசாமிலும் தொடக்கம்


இதனை தொடர்ந்து தற்போது அசாம் மாநிலத்திலும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது நாட்டின் 18வது வந்தே பாரத் ரயில் சேவையாகும். அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12 மணிக்கு காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இந்த அதிநவீன ரயில் இப்பகுதி மக்களுக்கு வேகத்துடனும், வசதியுடன் பயணிக்க வழிவகுக்கும்.


அசாமின் புதிய வந்தே பாரத் ரயில் சேவையானது கவுகாத்தி மற்றும் நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படுகிறது. இதன் மூலம் இரண்டு இடங்களையும் இணைக்கும் தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது இந்த ரயில் சுமார் ஒரு மணி நேர பயணத்தை மிச்சப்படுத்தும் என்று கூறப்படுகிறது.  இந்த ரயில் காமாக்யா, நியூ போங்கைகான், கோக்ரஜார், நியூ அலிபுர்துவார் மற்றும் நியூ கூச்பெஹார் ஆகிய இடங்களில் நின்று செல்லும். மேலும், நியூ ஜல்பைகுரியில் இருந்து காலை 6:10 மணிக்கு புறப்பட்டு மதிய நேரத்தில் கவுகாத்தி சென்றடையும். கவுகாத்தியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10:20 மணியளவில் நியூ ஜல்பைகுரியை சென்றடையும்.


இந்த ரயில் சேவை வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் செவ்வாய்கிழமை மட்டும் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 411 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் ஐந்தரை மணி நேரத்திலே கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


TN Weather Update: முடிவுக்கு வரும் அக்னி நட்சத்திரம்.. 13 மாவட்டங்களில் கொளுத்திய வெயில்..! இன்று எப்படி?


GSLV F12: விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி எப் 12...பயன்பாடுகள் என்னென்ன...?