மத்திய அமைச்சரவையில் கடந்த வாரம் புதிய மாற்றங்கள் நடைபெற்றது. முக்கிய அமைச்சர்கள் சிலரை நீக்கிவிட்டு புதிதாக 36 பேர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். தற்போது மொத்தமாக 78 பேர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று உள்ளனர். இந்த அமைச்சரவை கடந்த புதன்கிழமை பதவியேற்றது. இந்நிலையில் புதிய அமைச்சர்கள் கொண்ட மத்திய அமைச்சரவையின் குற்றப் பின்னணி, சொத்துகள் மற்றும் கல்வி தகுதி ஆகியவை குறித்து ஏடிஆர் என்ற தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 


கோடீஸ்வரர்கள்:


அதன்படி  புதிய மத்திய அமைச்சரவையில் 90 சதவிகிதம் பேர் மில்லியனர்களாக உள்ளனர். அதாவது 78 பேரில் 71 பேர் 1 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வைத்துள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக ஜோதிர் ஆதித்ய சிந்தியா (379 கோடி ரூபாய்) சொத்து வைத்துள்ளார். அவருக்கு அடுத்து பியூஷ் கோயல் (95 கோடி),நாராயணன் ரானே(87 கோடி),ராஜீவ் சந்திரசேகர்(64 கோடி) இடங்களை பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் 50 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பை கொண்ட அமைச்சர்களாக உள்ளனர். இதற்கு முன்பாக 2019ஆம் ஆண்டு பதவியேற்ற அமைச்சரவையிலும் 91 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். 




புதிய அமைச்சரவையின் சராசரி சொத்து மதிப்பு 16.24 கோடி ரூபாய் ஆக உள்ளது. இந்த அமைச்சரவையில் மிகவும் குறைவான சொத்துகளை கொண்ட அமைச்சர்கள் சிலர் உள்ளனர். பிரதிமா போமிக்(6 லட்சம் ரூபாய்), ஜான் பார்லா(14 லட்சம்), கைலாஷ் சௌதரி(24 லட்சம்), பிஸ்வேஸ்வர் துடு(27 லட்சம்), வி.முரளிதரன்(27 லட்சம்). 


மாற்றப்பட்ட அமைச்சரவை குழுக்கள்.. யாருக்கெல்லாம் இடம் தெரியுமா?


குற்றப் பின்னணி:


இந்த அறிக்கையின்படி தற்போது உள்ள மத்திய அமைச்சர்களில் 42 சதவிகிதம் பேருக்கு குற்றப் பின்னணி உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது 33 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு புதிய அரசு பதவியேற்கும் போது அப்போது இருந்த 56 அமைச்சர்களில் 39 சதவிகிதம் பேருக்கு குற்றப்பின்னணி இருந்தது. இந்த சதவிகிதம் புதிய அமைச்சரவையில் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 




கல்வி தகுதி:


பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் 9 பேர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். 21 பேர் முதுகலை பட்டப்படிப்பை பயின்றுள்ளனர். 17 பேர் தொழில் பிரிவு மற்றும் பிற பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயின்றுள்ளனர். 7 பேர் 12ஆம் வகுப்பு வரையும், 3 பேர் 10ஆம் வகுப்பு வரையும், 2 பேர் 8ஆம் வகுப்பு வரையும் படித்துள்ளனர். ஆகவே இந்த புதிய அமைச்சரவையில் படித்தவர்கள், பட்டம் படிப்பு முடிக்காதவர் என அனைவருமே இடம்பெற்றுள்ளனர். 


மேலும் படிக்க: இயற்கை பேரிடராகும் 'மின்னல் தாக்குதல்' - காலநிலை மாற்றம் ஏற்படுத்திய தாக்கம்: ஆய்வு கூறும் தகவல்!