மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், பல்வேறு அமைச்சரவைக் குழுக்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அமைச்சர் ஸ்மிருதி இராணி, சர்பானந்த சோனவால் ஆகியோருக்கு அரசியல் ரீதியான அமைச்சரவை குழுவில் இடமளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முதல்முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவராக இருந்த முருகன் உள்ளிட்ட சில புது முகங்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.


இந்நிலையில் பல்வேறு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவும் மாற்றியமைக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவில் மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் அஸ்ஸாம் முன்னாள் முதல்வராக இருந்த சர்பானந்த சோனவால் ஆகியோர் பிரதமர் மோடி தலைமையிலான குழுவில் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு, அனுராக் தாகூர், விரேந்திர குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கிறார்.




குறிப்பாக முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழுவில் அமைச்சர்கள் நாரயண் ரானே, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதே போல் கிசன் ரெட்டி, புபேந்தர் யாதவ், ஆர்.சி.பி.சிங், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் திறன் மேம்பாடு அமைச்சரவை குழுவில் இடம்பெற்றுள்ளனர். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இடம்பெற்றுள்ள புபேந்தர் யாதவ் அனைத்து முக்கிய குழுக்களிலும் இடம்பெற்றுள்ளார். அவரோடு சர்பானந்த சோனவால், கிரிராஜ் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் மனுஷ்க் மாண்ட்வியா ஆகியோரும் முக்கிய குழுக்கள் அனைத்திலும் இடம்பெற்றுள்ளனர்.


முன்னதாக பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்றார்கள். புதுடெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. மகாராஷ்டிராவின் நாராயண் தாட்டு ரானே முதலாவதாகப் பதவியேற்றார். அசாமிலிருந்து 2 முறை எம்.பி.யாகத் தேர்வான சர்பானந்த சோனாவால் அமைச்சராகப் பதவியேற்றார். இவர் மத்திய அமைச்சரவையில் விளையாட்டுத் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தவர்.


 






மத்தியபிரதேசத்திலிருந்து ஐந்து முறை மாநிலங்களவைக்குத் தேர்வான ஜோதிராத்திய சிந்தியா பாஜக அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார். 50 வயதான சிந்தியா முன்னாள் காங்கிரஸ் உறுப்பினராவார். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பீகாரின் ராம் பிரசாத் சிங் மற்றும்  ஒடிசாவின் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். மத்திய அமைச்சரவையில் விளையாட்டுத்துறை இணை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ விரிவாக்கம் செய்யப்படும் புதிய அமைச்சரவையிலும் அமைச்சராகப் பதவியேற்றார். 


மேற்கு வங்கத்திலிருந்து முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட டாக்டர் சுபாஷ் சர்கார் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர் மேற்கு வங்க எய்ம்ஸ் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றியவர். குஜராத் மாநிலத்திலிருந்து முதன்முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்ஜபரா மகேந்திரபாய் அமைச்சராகப் பதவியேற்றார். அந்த மாநிலத்தின் எளிய மக்களுக்கு குறைந்த பணத்தில் சேவை செய்யும் 2 ரூபாய் டாக்டராக அறியப்பட்டவர். கடைசியாக தமிழ்நாட்டின் எல்.முருகன் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்