மின்னலுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்று வானிலை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரே நாளில் மின்னல் தாக்கி இந்தியாவில் 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில் விஞ்ஞானிகளின் கூற்று முக்கியத்துவம் பெறுகிறது.


இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழைக் காலம் மீண்டும் வலுப்பெற்று வருகிறது. கூடவே, மின்னல் தாக்கி நேரும் உயிரிழப்புகளும் நடக்கின்றன.


உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் மட்டும் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று மின்னல் தாக்கி 68 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. காயமடைந்தவர்களுக்கு ரூ.50000 நிவாரண நிதி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.




இது இத்துடன் முடிந்துபோகக் கூடிய செய்தி அல்ல. கடந்த சில ஆண்டுகளாக கிடைக்கப்பெற்ற புள்ளிவிவரங்கள் மின்னல் தாக்கி ஏற்படும் உயிரிழப்புகள் தான் இந்தியாவில் மிகப்பெரிய இயற்கை பேரிடருடன் இணைக்கப்பெற்ற உயிர்க்கொல்லி சக்தியாக இருக்கிறது என்று தெரிகிறது. 


இதனை உறுதிப்படுத்த உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரமும் உள்ளது. அந்த புள்ளிவிவரத்தின்படி, 2019ல், ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் பெரும்பாலும் 5 மாநிலங்களிலேயே அதிகம் மின்னல் தாக்குகிறது. 2019ல், ஒடிசாவில் மட்டும் 9,37,462 முறை மின்னல் தாக்கியுள்ளது. இதில் மேகத்திலிருந்து நேரடியாக பூமியின் தரையைத் தொடும் மின்னல்கள் 16%. நாடு முழுவதும் 2019ல் 2 கோடி மின்னல்கள் தாக்கியுள்ளன. இவற்றில் 72% பூமியைத் தொட்டுச் சென்றவை என்று தெரியவந்துள்ளது.


அதேபோல், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரத்தின்படி, 2019ல் நாடு முழுவதும் 8,145 பேர் இயற்கைச் சீற்றங்களால் உயிரிழந்துள்ளனர். அவற்றில் 35.3% மின்னல் தாக்கியதாலும், 15.6% சூரிய வெப்பத் தாக்குதலாலும், 11.6% மழை வெள்ளத்தாலும் நடந்துள்ளது. இயற்கைச் சீற்றங்களில் உயிரிழந்தவர்களின் வயது வரம்பை கணக்கில் கொண்டால்,  30-45 வயதுடையோர் (25.3%) பேரும், 45-60 வயதுடையோர் (24.9%) பேரும் உள்ளனர். இதில் மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கையே அதிகம்.


2019ல் மின்னல் தாக்கி, பிஹாரில் 400 மரணங்கள், மத்தியப் பிரதேசத்தில் 400 மரணங்கள், ஜார்க்கண்டில் 334 மரணங்கள், உத்தரப்பிரதேசத்தில் 321 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.




மின்னல் தாக்கம் அதிகரிப்பதற்கு புவி வெப்பமயமாதல் முக்கிய காரணி என்கின்றனர் நிபுணர்கள். புனேவில் உள்ள ஐஐடிஎம் ( Indian Institute of Tropical Meteorology) மையத்தில் கடந்த மாதம் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பேசிய விஞ்ஞானி எஸ்.டி.பவார், "1960லிருந்து 2019 காலக்கட்டத்தில் மின்னல் தாக்கி ஏற்பட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும் தற்போது மின்னல் உயிரிழப்புகள் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. இது நேரடியாக காலநிலை மாற்றத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதால் நிலப்பரப்பின் மீதான ஈரத்தன்மை அதிகரிக்கிறது. இது மின்னல் அபாயத்தை ஏற்படுகிறது" என்று கூறியுள்ளார்.


இன்னும் மாறாத மக்கள்:


இது ஒருபுறம் இருக்க மழை, மின்னல் ஏற்படும்போது மரத்தடியில் தஞ்சம் புகக்கூடாது என்று எத்தனை முறை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட கிராமப்புறங்களில் இந்தப் பழக்கம் மாறவில்லை. இதனாலேயே மின்னல் மரணங்கள் இன்றளவும் அதிகம் நேர்கிறது என்று கூறப்படுகிறது. மின்னல் தாக்கம் அதிகம் நிகழக்கூடிய மாநிலங்களில், மின்னல் முன்னறிவிப்பை தரும் சில தனியார் வானிலை ஆய்வு நிறுவனங்களும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.