அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது. இம்முறை பாஜக சார்பில் ஹிமந்தா பிஸ்வா சர்மா முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். புதிய அரசு எடுத்த உடனே கால்நடைகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி புதிய கால்நடை பாதுகாப்பு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நேற்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் பல புதிய கட்டுப்பாடுகளை அசாம் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி இனிமேல் அசாம் மாநிலத்தில் இந்து, சீக்கியர், சமண மதம் சார்ந்த மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றுளவில் மாட்டிறைச்சி விற்கவோ, கொண்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த மதங்களை சார்ந்த கோயில்கள் இருக்கும் இடங்களிலும் இந்த 5 கிலோ மீட்டர் தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகள் சட்டவிரோதமாக கடத்துவது மற்றும் இறைச்சிக்காக வெட்டுவதை ஆகியவற்றையும் இந்த புதிய மசோதா தடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அசாமில் ஏற்கெனவே கால்நடைகள் பாதுகப்புச் சட்டம் 1950 தற்போது அமலில் உள்ளது. அதில் இதுபோன்ற விஷயங்கள் எதுவும் இல்லை. ஆகவே இதுபோன்ற புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்து பழைய சட்டத்தை முழுவதுமாக பாஜக அரசு மாற்ற உள்ளது.
இந்தச் சட்டம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா,"இந்த சட்டத்தின் மூலம் அசாம் மாநிலத்தில் யாரும் உரிய அனுமதி இல்லாமல் கால்நடைகளை கொண்டு செல்லவோ அல்லது இறைச்சிகாக வெட்டவோ முடியாது. நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 48ல் கால்நடைகளின் நலனை பேணி காப்பது அரசின் கடமைகளில் ஒன்றாக உள்ளது. அதை தான் நாங்கள் செய்கிறோம். இந்தப் புதிய சட்டத்தின் மூலம் கால்நடைகளின் நலன் காக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேபபரத்தா சாகியா,"இந்த புதிய மசோதாவில் பல பிரச்னைகுரிய பிரிவுகள் உள்ளன. இது பசுவை மதிக்கவோ பாதுகாக்கவோ கொண்டு வரப்பட்டது அல்ல. இது குறிப்பாக ஒரு சமூகத்தினரின் சுதந்திரத்தை பறிக்க கொண்டு வந்தது போல் உள்ளது. உதாரணத்திற்கு யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ஒரு கோவிலை கட்டலாம். அப்படி எங்கு கோவில் கட்டினாலும் அங்கு இருந்து 5 கிலோ மீட்டருக்கு மாட்டிறைச்சி விற்க கூடாது என்றால் அது எப்படி சாத்தியமாகும். இந்த மசோதாவில் உள்ளவற்றை நாங்கள் சட்டப்படி ஆராயந்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த மாட்டிறைச்சி தொடர்பான சட்டங்கள் உள்ளன. ஆனால் அங்கு கூட இதுபோன்று ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மாட்டிறைச்சி விற்க தடை எதுவும் இல்லை. மேலும் பசு இறைச்சி விற்க மட்டுமே அங்கு எல்லாம் கட்டுப்பாடுகள் உள்ளன. எருமை மாடு உள்ளிட்ட பிற கால்நடை இறைச்சி விற்க அங்கு தடையில்லை. அசாம் மாநிலத்தில் இது மொத்தமாக கால்நடை என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. அதுவும் ஒரு பிரச்னைக்குரிய விஷயம் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க:''எங்கெங்கும் மக்கள் கூட்டம்.. இது ஆபத்து..'' மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கும் மருத்துவ சங்கம்