மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து டெல்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். போபால் நகரில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து அதிவேக ரயிலை மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


போபால் - டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்:


இதன் திறப்பு விழாவில், மதியம் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்தியப் பிரதேச ஆளுநர் மங்கு பாய் படேல் மற்றும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ரயில் சேவையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, "ரயில்வே துறையை மாற்றியமைப்பதும், குடிமக்களுக்கு பயண வசதி ஏற்படுத்துவதும் எனது அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது" என்றார். 'பாரதிய ரயில்' என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி ரயிலில் உரையாடினார்.


ரயில்வே ஊழியர்களுடன் மோடி உரையாடல்:


அதேபோல, ரயில்வே ஊழியர்களுடனும் மோடி உரையாடல் மேற்கொண்டார். ராணி கமலாபதி ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் நடக்கும் ரயில் சேவை தொடக்க விழாவை பார்க்க இரண்டாவது நடைமேடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 


இது 11ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையாகும். சனிக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இயக்கப்படும். போபாலில் இருந்து டெல்லி வரை செல்லும் இந்த ரயில் சுமார் 700 கிமீ தூரத்தை 7.30 நேரத்தில் கடக்கும். போபாலில் இருந்து டெல்லி செல்ல ஏசி சேர் வகுப்பில் ஒரு நபருக்கு ரூ.1,735 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏக்சிக்யூடிவ் சேர் கார் கட்டணம் ரூ.3,185 ஆகும்.


ராணி கமலாபதி நிலையத்திலிருந்து காலை 5:40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:10 மணிக்கு ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையத்தை சென்றடையும். செல்லும் வழியில் குவாலியர் மற்றும் ஆக்ராவில் மட்டும் இந்த ரயில் நின்று செல்லும். 


நாட்டில் ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அதிவேக ரயில்கள்களின் சேவை வழித்தட எண்ணிக்கையை ரயில்வே அமைச்சகம் வேகமாக அதிகரித்து வருகிறது.


போபாலில் உள்ள குஷபவ் தாக்கரே அரங்கில் நடைபெற்ற ஒருங்கிணைந்த ராணுவத் தளபதிகளின் உச்சிமாநாடு 2023 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார். இதில் முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க: PBKS vs KKR, IPL 2023 LIVE: திணறும் கொல்கத்தா.. அட்டகாசமாக பந்து வீசும் பஞ்சாப்; ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்திய அர்ஷ்தீப்..!