கேரள மாநிலம் காயல் கரையோரத்தில் உள்ள மைதானத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவில் உள்ள கொச்சிக்கு புறப்பட்டு சென்றார். அவரை, கேரள மாநில தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவி வரவேற்றார். ஸ்டாலினுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவும் கேரளாவிற்கு சென்றார்.
அனைவரின் கவனத்தையும் ஈர்த்த முதலமைச்சர் ஸ்டாலின்:
விழாவில் சிறப்பு விருந்தினராக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி அசத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அப்போது, வைக்கம் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், "வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிறது. மார்ச் 6ஆம் தேதி நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்டத்தின் 200ஆவது ஆண்டு விழாவில் பினராயியை சந்தித்து பேசினேன்.
தமிழ்நாட்டுக்கு உணர்ச்சி, எழுச்சியை ஏற்படுத்திய ஊர் வைக்கம் என்றேன். தமிழ்நாட்டில் கோயில் நுழைவு போராட்டங்களை நடத்த தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம்.
இந்தியாவுக்கே வழிகாட்டிய வைக்கம் போராட்டம்:
உடல் வேறு என்றாலும், எனக்கும் பினராயி விஜயனுக்கும் சிந்தனை ஒன்று தான். தமிழ்நாடு சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையிலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்துள்ளேன். வைக்கம் போராட்டம் என்பது கேரளாவின் சமூக நீதி வரலாற்றில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம். இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்.
மஹர் போராட்டத்தை நடத்துவதற்கு வைக்கம் போராட்டம் தான் தூண்டுகோலாக அமைந்தது என்று அண்ணல் அம்பேத்கர் பிற்காலத்தில் குறிப்பிட்டுள்ளார். சுயமரியாதை, சமூகநீதி போராட்டத்தின் துவக்கமான வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன். பெரியாரின் எழுச்சியால் தமிழ்நாட்டில் இருந்து பல தலைவர்கள் வைக்கம் வந்து போராடினர்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வைக்கம் போராட்ட வரலாறு:
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற இடத்தில் மகாதேவர் கோயில் உள்ளது. அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்களான ஈழவர், புலையர் ஆகியோர் நடக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தெருக்களில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்களில் உயர்சாதியாக கருதப்படுவோர் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஈழவர், தீயர், புலையர் ஆகியோர் நடக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இப்பிரச்சனைக்காக 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி காலை 6 மணிக்கு போராட்டம் நடத்த காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்தனர். இதுதான் வைக்கம் போராட்டத்தின் முதல் போராட்டமாகும்.
இந்த அறவழிப் போராட்டத்தை டி.கே.மாதவன் தொடங்கினார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். எனவே தலைவர்கள் இல்லாமல் போராட்டம் தத்தளித்தது.
கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்த பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். அங்கு பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு பெரியார் அழைத்துச் சென்று, வைக்கம் வீரர் என்ற பட்டப் பெயரையும் பெற்றார்.