பிரதமர் மோடி தலைமையிலான அவசர உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று மதியம் கூடியது. நாடெங்கிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை அடுத்து மாநிலங்களின் ஆக்சிஜன் தேவை குறித்தும் ஆக்சிஜன் உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்கான வழிவகை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய கடந்த சில வாரங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் பிரதமருக்கு விவரித்தார்கள். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இக்கட்டான சூழலில் அடுத்தடுத்து வேகமாகப் பல்வேறு கோணங்களில் பணியாற்ற வேண்டியதன் தேவை குறித்து விளக்கினார்.
ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்தல், மாநிலங்களுக்கு அவற்றை விரைந்து விநியோகித்தல் மற்றும் புதிய வகைகளில் ஆக்சிஜன் உற்பத்தி குறித்த ஆய்வில் அதிக கவனம் செலுத்தச் சொல்லி அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். மேலும் எவ்விதத் தடங்கலுமின்றி மாநிலங்களின் ஆக்சிஜன் தேவை பூர்த்திசெய்யப்பட மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.