கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் சட்டவிரோதமாக  இயேசு சிலுவை கட்டப்படும் முயற்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற பொதுநல மனுதாக்கல் செய்த மனுதாரரை அந்த மாநில உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. மனுதாரர் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையை குறிவைப்பது ஏற்புடையதல்ல என்றும் கண்டனம் தெரிவித்தனர்.                


யோகா ஆசிரியராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மனுதாரர் தனது மனுவில், "பொது இடத்தில் எழுப்படும் இயேசு சிலுவைகளை அகற்ற வேண்டும். பொது இடங்களில் வாரம்தோறும் நடைபெறும் பிரார்த்தனை கூட்டங்களால் மாசு அதிகரித்து வருகிறது. இதை உடனடியாக தடுக்கவேண்டும். மேலும், இத்தகைய செயல் சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பதாக  அமைகிறது" என்று குறிப்பிட்டார். தலைமை நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா மற்றும் நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இந்த மனு ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கை மீது நடத்தப்படும் திட்டமிட்ட  தாக்குதல். இதைத்தவிர வேறு உந்துதல் மனுதாரரிடம் இல்லை” என்றும் தெரிவித்தனர். 


மனுதாரரின் ஒவ்வொரு வாதத்துக்கும் நீதிபதிகள் தக்க எதிர்வாதங்களை எழுப்பினர். மாசு தொடர்பாக பதிலளித்த நீதிபதிகள், "பிரார்த்தனை கூட்டங்களால் மாசு அதிகரிக்குமா? அப்படியென்றால், இந்து மத கூட்டங்களில் மாசு அதிகரிக்காதா? நீங்கள், ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையை தாக்கவில்லையா?” என்று கூறினார். 



மேலும், நில அபகரிப்பு தொடர்பான வாதத்துக்குப் பதிலளித்த நீதிபதிகள்”, பலதரப்பட்ட மத அமைப்புகளும் சட்டவிரோத கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. சட்டவிரோத ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டுள்ள இந்து அமைப்புகள் மீது நடிவடிக்கை எடுக்கக்கோரி பல வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இரண்டு சிலுவை நிறுவப்படுவதால் சமூக ஒற்றுமை சீர்குலைந்து விடுமா?" என்று தெரிவித்தனர். 


தலைமை நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா தனது உத்தரவில், "மனுதாரருக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.  அவரின் வாதங்களை சற்று கவனியுங்கள். அவரின் நோக்கம் வெளிப்டையாகவே உள்ளது. எத்தகைய பாரபட்ச கருத்துக்கள் அவரிடம் உள்ளன? இது திட்டமிடப்பட்ட வழக்கு. இந்த மனுவை ரத்து செய்கிறோம்" என்று காட்டமாக தெரிவித்தார். 



 


சட்ட விரோத கட்டமைப்புகள் இருந்தால், சட்டத்திற்கு உட்பட்டு தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். கர்நாடகா மாநிலத்தில் மத வழிபாடு தொடர்பான சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்புடைய மற்றொரு பொது நல வழக்கு விசாரணையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.