மும்பையில் தான் செல்லமாக வளர்க்கும் நாயை "குட்டா (நாய்)" என்று அழைத்ததைக் கண்டு ஆத்திரமடைந்த 25 வயது நபர் ஒருவர், 60 வயது ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரை தாக்கி, முகத்தில் காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
செல்லபிராணியை நாய் என்று அழைத்ததால் அடி
குற்றம் சாட்டப்பட்ட ராகுல் போஸ்லே என்னும் நபர், தனது செல்லப்பிராணியின் பெயரை லூசி என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, போஸ்லேவுக்கு எதிராக ஐந்து முதல் ஆறு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் அவர் மே 2021 முதல் மே 2022 வரை மும்பை நகரத்திலிருந்து தலைமறைவாக இருந்துள்ளார். "எப்.ஐ.ஆர்.க்குப் பிறகு, போஸ்லே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்" என்று பாண்டுப் காவல் நிலையத்தின் காவல் துணை ஆய்வாளர் அபிஜித் தெகாவாடே கூறினார்.
நாயை தேடிய போஸ்லே
செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் 60 வயது சிவசாகர் பாட்டீல், வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் பாண்டுப்பில் உள்ள MHADA காலனியை அடைந்தபோது, அங்கு தனது நாயை தேடிக்கொண்டிருந்த ராகுல் போஸ்லே அவரை அழைத்து சாலையில் ஏதாவது நாய் செல்வதை பார்த்தீர்களா என்று கேட்டுள்ளார். பாட்டீல் "குட்டாவை (நாயை)" பார்க்கவில்லை என்று பதிலளித்தார். இது போஸ்லேவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
நாய் இல்லை… லூசி
குற்றம் சாட்டப்பட்டவர் தனது செல்ல நாயை "குட்டா (நாய்)" என்று குறிப்பிட வேண்டாம், அதன் பெயரை - லூசி என்று குறிப்பிடுமாறு கூறியுள்ளார். பாட்டீலின் கூற்றுப்படி, ஆத்திரம் அடைந்த போஸ்லே தனது ஆட்டோவை உதைக்கத் தொடங்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அவரை தகாத வார்த்தைகளில் திட்டிய போஸ்லே அவரது காலரைப் பிடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டினார்.
வழக்குப்பதிவு செய்து கைது
இந்த சண்டையின் போது, போஸ்லே 60 வயது முதியவரின் முகத்தில் குத்தியதாகவும், அவரது உடலில் பலத்த அடிகளை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. "எனக்கு காயங்கள் ஏற்பட்டன மற்றும் என் முகத்தில் இருந்து இரத்தம் வர ஆரம்பித்தது," என்று முதியவர் காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறினார். பிறகு சுற்றி இருந்தவர்கள் தலையிட்டு தடுத்துள்ளனர். மேலும் பாட்டீல் முலுண்ட் பொது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். நள்ளிரவில், பாதிக்கப்பட்டவர் பாண்டுப் காவல்துறையை அணுகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அவரது அறிக்கை மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 324 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 506(2) (கொலைமிரட்டல்) 504 (அமைதியைக் கெடுக்கும் நோக்கில் அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து போஸ்லே கைது செய்யப்பட்டதாக பாண்டுப் காவல் நிலைய மூத்த ஆய்வாளர் நிதின் உன்ஹானே தெரிவித்தார்.