89 தொகுதிகளுக்கு உட்பட்ட குஜராத் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய முதற்கட்ட தேர்தலில் 19 மாவட்டங்களிலும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
முதற்கட்ட தேர்தல்:
முதற் கட்டமாக நடைபெற உள்ள தேர்தலுக்கு, 25 ஆயிரத்து 434 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நகர் பகுதியில் 9 ஆயிரத்து 18 வாக்கு சாவடிகளும், கிராம புறங்களில் 16 ஆயிரத்து 416 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.38 ஆயிரத்து 749 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.
மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு இமாச்சலப் பிரதேசத்துடன் இணைத்து தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. குஜராத்தில் மொத்தமாக 4 கோடியே 91 லட்சத்து 17 ஆயிரத்து 708 பேர் உள்ள நிலையில் , முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் 3கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 பேர் வாக்களிக்கவுள்ளனர்
11 மணி நிலவரம்:
குஜராத் மாநிலத்தில் இன்று முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 4.62% வாக்கு பதிவானது. தற்போது 11 மணி நிலவரப்படி 18.95% வாக்கு பதிவாகியுள்ளது.
முதற்கட்டமாக நடைபெறும் தேர்தலில் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 70 பெண்களும் 339 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். பாஜக காங்கிரஸ் இடையே 89 தொகுதிகளிலும் நேரடி போட்டி உள்ளது. ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை 2 வேட்பாளர்கள் திடீரென வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால் 87 மட்டுமே உள்ளனர்.
100 வயதிலும் தவறாமல் வாக்களித்த மூதாட்டி
வாக்களிப்பது நமது உரிமை என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் சுவாரஸ்ய விஷயங்கள் நடந்துள்ளது. அதன்படி, வல்சாத் மாவட்டத்தின் உம்பர்கான் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் 100 வயதான கமுபென் படேல் என்ற மூதாட்டி வாக்களித்தார்.
இதுபோன்று அம்ரேல் பகுதியில் பெட்ரோல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை நினைவூட்டும் வகையில் சிலிண்டரை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு காங்கிரஸ் எம்எல்ஏ பரேஷ் தணானி வாக்களித்தார்.
குஜராத் தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்க உரிமை பெற்றுள்ள மினி ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்கள் நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். மேலும் ஆப்பிரிக்க வம்சாவளியர் வாக்களிக்க தனி பூத் அமைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்துக்கு குடிப்பெயர்ந்த சில பழங்குடியினருக்கு அண்மையில் இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் ஓட்டுரிமையும் பெற்றனர். இதற்கு விதவிதமான உணவு சமைத்தும் நடனமாடியும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.