என்சிபி இரண்டாக பிரிந்த நிலையில், இரு பிரிவுகளும் தங்கள் பலத்தை வெளிப்படுத்த மும்பையில் இன்று, ஷரத் பவார் மற்றும் அவரது மருமகன் அஜித் பவார் தரப்புகளுக்கு இடையே முக்கிய சந்திப்பு நடைபெற உள்ளது. அஜித் பவார் மகாராஷ்டிரா அரசில் இணைந்ததன் மூலம் என்சிபியில் பிளவு ஏற்பட்ட பிறகு, இரு பிரிவுக்கும் ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் தெளிவான எண்ணிக்கை இந்த சந்திப்புக்கு பின்னர் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சரத் பவாரின் தலைமையிலான என்சிபி


சரத் பவாரின் தலைமையிலான என்சிபி அணியை சேர்ந்த ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், "அனைத்து அலுவலக நிர்வாகிகள், என்சிபியின் முன்னணி செல்களின் தலைவர்கள், மாவட்ட யூனிட் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தாலுகா அளவிலான கட்சித் தொண்டர்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிகள் மற்றும் எம்பிகள் கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்" என்றார். 



எம்.எல்.ஏ.க்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்


காலை 11 மணிக்கு மும்பை புறநகர் பாந்த்ராவில் உள்ள மும்பை கல்வி அறக்கட்டளை (MET) வளாகத்தில் அஜித் பவார் முகாம் கூடுகிறது. செவ்வாயன்று, சரத் பவார் கோஷ்டியின் தலைமைக் கொறடா ஜிதேந்திர அவாத், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அவர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் என்சிபிக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்: Udhayanidhi Stalin: விஜய், அஜித்துக்கு ஒரு நியாயம்.. உதயநிதிக்கு ஒரு நியாயமா? - மாமன்னன் படத்தை விமர்சிக்கும் இணையவாசிகள்!


யாருக்கு ஆதரவு அதிகம்?


40 எம்எல்ஏக்கள் அஜித் பவார் அணியில் இருப்பதாக அஜித் பவாரின் என்சிபி அணி தலைவர் பிரபுல் படேல் செவ்வாய்க்கிழமை கூறியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. எங்களுடன் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர், அதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை என்று படேல் கூறினார். அவர் அப்படி சொல்லும் அதே நேரத்தில், அஜித் பவாருக்கு 13 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக சரத் பவார் கூறினார். அதே நேரத்தில் பெரும்பான்மையான என்சிபி எம்எல்ஏக்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக அஜித் பவாரும் கூறியுள்ளார், இதில் எது உண்மை என்பது இன்று தெரிந்துவிடும்.



முடிவுக்கு பின் என்னாகும்?


கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்க அஜித் பவாருக்கு குறைந்தது 36 என்சிபி எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் பவார் மற்றும் அமைச்சர்களாக பதவியேற்ற 8 எம்எல்ஏக்கள் மீது சரத்பவார் தரப்பு ஏற்கனவே தகுதி நீக்க மனு தாக்கல் செய்துள்ளது. மறுபுறம், அஜித் பவார் அணி மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகரிடம், மாநில என்சிபி தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் ஜிதேந்திர அவாத் ஆகியோரை சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. NCP சட்டமன்றக் கட்சியின் தலைவராக அஜித் பவார் நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் ஞாயிற்றுக்கிழமை அமைச்சராக பதவியேற்ற அனில் பைதாஸ் பாட்டீல், மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் NCP இன் கொறடாவாக இருப்பார் என்று பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.