ஓயோ ரூம்ஸ் நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் ஹரியானா மாநிலம் குருகிராமில் இன்று மதியம் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.


தவறி விழுந்து மரணம்:


குருகிராம் செக்டார் 54 பகுதியில் உள்ள தி க்ரெஸ்ட் சொசைட்டி குடியிருப்பு பகுதியில் 20ஆவது மாடியில் இருந்து ஒருவர் கீழே விழுந்ததாக மதியம் 1 மணியளவில் குடியிருப்பு பகுதியின் பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.


காவல்துறை விளக்கம்:


இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி விவரிக்கையில், "சிகிச்சைக்காக பாராஸ் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். காவல் நிலைய அதிகாரியுடன் சென்று குழு சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டது. சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்ததில், விழுந்த நபர் ரமேஷ் பர்சாத் அகர்வால் என அடையாளம் காணப்பட்டது. அவர் பராஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்" என்றார்.


ரமேஷ் பர்சாத் அகர்வாலின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தந்தை இறந்தது குறித்து ரித்தேஷ் அகர்வால் வெளியிட்ட அறிக்கையில், "எனது குடும்பத்தினரும் நானும், கனத்த இதயத்துடன், எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த என் தந்தை ரமேஷ் அகர்வால் இன்று காலமானார் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். 


எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு:


அவர் ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து என்னையும் எங்களில் பலரையும் ஒவ்வொரு நாளும் ஊக்கப்படுத்தினார். அவரது மறைவு எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். எனது தந்தையின் பரிவும் அரவணைப்பும் எங்களின் கடினமான காலங்களில் எங்களை வழி நடத்தியது.


அவருடைய வார்த்தைகள் நம் இதயத்தில் ஆழமாக ஒலிக்கும். இந்த துயரமான நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.


கடந்த செவ்வாய்கிழமைதான், ரித்தேஷ் அகர்வாலுக்கரும் கெட்டான்ஷா சூதுக்கும் திருமணம் நடந்தது. அந்த திருமண விழாவில் கூட, ரமேஷ் அகர்வால் பங்கேற்றிருந்தார். மார்ச் 7ஆம் தேதி, டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியான தாஜ் பேலஸ் ஹோட்டலில் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.


இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக இருப்பவர் ரித்தேஷ் அகர்வால். உலக தொழில்நுட்ப துறையில் முக்கிய தொழில்முனைவோராக உள்ள ரித்தேஷ் அகர்வாலின் திருமணத்திற்கு,ஜப்பானிய தொழிலதிபரும் சாப்ட் பேங்க் குழும நிறுவனர் மசயோஷி சன்னும் கலந்து கொண்டார்.


கடந்த 2012ஆம் ஆண்டு, ஓயோ நிறுவனத்தை ரித்தேஷ் அகர்வால் தொடங்கினார். ஓயோ செயலி மூலம், நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விடுதியை புக் செய்யலாம்.


இதையும் படிக்க: RCB-W vs UPW-W Live: வைக்க முதல் வெற்றியைப் பெறும் முனைப்பில் ஆர்.சி.பி; டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!