டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிஐயை தொடர்ந்து, அமலாக்கத்துறை டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை நேற்று கைது செய்தது.


அமலாக்கத்துறை அதிரடி:


இந்நிலையில், அவரை ஏழு நாள்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காவலில் எடுத்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.


இந்த விவகாரத்தில், தொடர் அரசியல் அழுத்தம் காரணமாக டெல்லி துணை முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறகு இரண்டாவது முக்கிய தலைவராக உள்ள சிசோடியா, பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். 


இன்று நடைபெற்ற விசாரணையில், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் மணிஷ் சிசோடியாவை 7 ​​நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மதுபானக் கொள்கையை வகுப்பதில் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் டெல்லி துணை முதலமைச்சரிடம் விசாரணை நடத்த குறைந்தபட்சம் 10 நாட்கள் அவகாசம் கோரியது அமலாக்கத்துறை.


முறைகேட்டில் கிடைத்த பணம் எங்கு செல்கிறது?


சிசோடியா தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை, வரும் மார்ச் 21ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிசோடியாவின் காவலை கோரி வாதம் முன்வைத்த அமலாக்கததுறை, "டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் பணம் எங்கு செல்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.


இந்த முறைகேட்டால் கிடைத்த வருமானம் குறைந்தது 292 கோடி ரூபாய் இருக்கலாம். அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். சிசோடியாவை காவலில் எடுத்து விசாரணைக்கு உட்படுத்த விரும்புகிறோம்" என தெரிவித்தது.


நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையின் வாதத்திற்கு பதில் வாதம் வைத்த சிசோடியா தரப்பு வழக்கறிஞர், "ஏஜென்சிகள் கைது செய்வதை உரிமையாக எடுத்துக்கொள்வது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. கைது செய்வதை உரிமையாக நினைக்கும் மத்திய அரசின் அமைப்புகள் மீது நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.


அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார் என எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்திருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது.


எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு எதிர்கட்சிகளை சேர்ந்த 8 தலைவர்கள் ஏற்கனவே, கடிதம் எழுதியிருந்தனர்.


கைதுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சிகள்:


பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முதலமைச்சருமான கே. சந்திரசேகர ராவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.


அந்த கடிதத்தில், "இந்தியா இன்னும் ஒரு ஜனநாயக நாடு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளின் அப்பட்டமான நடவடிக்கை, நாம் ஜனநாயகத்தில் இருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டோம் என்பதை உணர்த்துகிறது" என குறிப்பிட்டிருந்தனர்.