பாரதிய ஜனதாவின் மத்திய மாநில எதிர்கட்சித் தலைவர்கள் நாளை டெல்லியில் சந்திக்கவுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரிணமூல் காங்கிரஸ்,சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட பதினைந்து முக்கியக் கட்சிகளை அடங்கிய கூட்டம் நாளை ராஷ்டிர மஞ்ச் என்கிற பெயரில் சந்திக்க உள்ளார்கள். கொரோனாவுக்குப் பிறகான தலைவர்கள் நேரடியாகச் சந்திக்கும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு அறுவை சிகிச்சைகள் முடிந்த நிலையில் தற்போது இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக டெல்லி விரைந்துள்ளார்.



 

அண்மையில் தேர்தல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை அவரது மும்பை இல்லத்தில் சந்தித்தார். கிஷோர் மேற்கு வங்காளம், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களில் முறையே திரிணமூல் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற களவேலைகளைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவின் ஆளும் சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏக்கள் சிலர் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடையேயான கூட்டணியை எதிர்த்தும் சிவசேனா விரைந்து பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று கோரியும் அண்மையில் கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். அதே சமயம் உத்தவ் தாக்கரே அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். 





மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணிப்பிளவா என அனைவரும் புருவம் உயர்த்திய நிலையில் அதற்கு பதிலளித்திருந்த உத்தவ் தாக்கரே, ‘அரசியல் கூட்டணி இல்லை என்பதற்காக பாரதிய ஜனதாவுடனான உறவை சிவசேனா முறித்துக்கொள்ளாது’ என பதில் அளித்திருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும், ‘காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்- சிவசேனா கூட்டணி தனது ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய்யும்.அதோடு மட்டுமல்லாமல் வரவிருக்கும் லோக்சபா தேர்தலையும் ஒன்றாக எதிர்கொள்ளும்’ எனக் கூறியிருந்தார். இதற்கிடையேதான் பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஒருமுறை சரத் பவாரைச் சந்தித்துள்ளார். ’மிஷன் 2024’ என்னும் 2024 லோக்சபா தேர்தலுக்கான முன் தயாரிப்புதான் இந்தச் சந்திப்பு எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே மூன்று அறுவை சிகிச்சை முடிந்து உடல்நிலை தேறிவரும் சரத்பவார் இன்று தனது டெல்லி இல்லத்துக்கு விரைகிறார். அங்கே 23 ஜுன் வரை இருக்கும் அவர் எதிர்கட்சித் தலைவர்களைத் தேர்தல் கூட்டணி தொடர்பாகச் சந்திக்க உள்ளார் எனத் தெரிகிறது. 

2024 தேர்தலில் மோடி அரசை எதிர்கொள்வதற்காக மாநிலக் கட்சிகள் வலுவான கூட்டணியை உருவாக்கிவருவதற்கான அறிகுறி தொடர்ந்து மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா எனப் பல மாநிலங்களில் தென்படுகிறது. சிறுவணிகங்களுக்கான கடன் திரும்பச் செலுத்தும் காலத்தை மத்திய அரசை நீட்டிக்கக் கோருவது தொடர்பாக 12 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியது, மத்திய ஆட்சியின் கொடுங்கோன்மையை எதிர்கொள்ள மாநில அரசுகள் கூட்டணியாக இயங்கவேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது,  மாநிலங்களுடன் சண்டை பிடிக்காத அவர்களைத் துன்புறுத்தாத மத்திய அரசை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்தது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் அண்மையில் நிகழ்ந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் மீட்டிங்கில் மாநிலங்களுக்கான பங்குகளில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளைச் சுட்டிக்காட்டியது. இப்படி அடுக்கடுக்கான அரசியல் மாநிலங்களுக்கும் மத்திக்கும் இடையிலான இந்த இழுபறி ஆட்டத்தை வெளிப்படையாக வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. 


Also Read: முதலமைச்சர்கள் Vs பிரதமர் மோடி : உருவாகிறதா மாநில அரசுகள் கூடும் மூன்றாவது அணி?