இந்திய அளவில் கடந்த ஆண்டில் மட்டும் வாய்ப்புற்று சிகிச்சைக்காக அரசாங்கமும் தனியாரும் தொண்டு நிறுவனங்களும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாகவும் சேர்ந்து செலவழிக்கப்பட்ட தொகை 2,386 கோடி ரூபாய் என்று தெரியவந்துள்ளது. 


டாட்டா நினைவு மையத்தின் ஒரு குழுவினர் புற்றுநோய் சிகிச்சைக்கான செலவு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். புற்றுநோயின் தாக்கம் குறித்தும் அதற்கான சிகிச்சைக்கு ஆகும் செலவு குறித்தும் பகுப்பாய்வு செய்யும் அந்தக் குழுவுக்கு மருத்துவர் பங்கஜ் சதுர்வேதி தலைமைவகித்தார். இது தொடர்பான கொள்கையை வகுப்பதற்கான விவரங்களை வழங்கவும் தேவைக்கு ஏற்ப நிதியை ஒதுக்கவும் வழி ஏற்படும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை இப்படியான ஆய்வு இதுதான் முதல் முறையாகும். கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் புற்று பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 68 சதவீதமாக அதிகரித்துள்ள சூழலில், இது பெரும் பொது சுகாதார இடராக மாற்றப்பட்டுள்ளது; இத்துடன் புற்றுநோய் சிகிச்சை கிடைப்பதும் மிக மோசமாக இருக்கிறது என்கிறார் டாட்டா நினைவு மையத்தின் இயக்குநர் மருத்துவர் ஆஏ பத்வே. 


“நோய் குறித்த அறியாமையால் பெரும்பாலான பிணியாளர்கள் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு வருகின்றனர்; அப்போது பாதிப்பை குணப்படுத்துவது கடினமாகி விடுகிறது. குறைந்தது 10 சதவீதம் பேராவது இறுதிக் கட்டத்தில் வரும்போது அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே முடியாத நிலையும் மேற்கொண்டு அவர்களுக்கு வாழ்நாள்வரை நன்றாக கவனித்துக்கொள்வது என்பதும்தான் சாத்தியம்.”என்றும் அவர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிது சிகிச்சை எடுத்ததும் அவர்களுக்கு வேலை போய்விடுகிறது. அதனால் அவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது. மருத்துவக் காப்பீடு அல்லது அரசு உதவி பெற வாய்ப்பு உள்ளவர்களும் பல திட்டங்களின் காரணமாக, சிகிச்சைக்கு வேண்டிய தொகையைப் பெறமுடியாமல் போகிறது. இதனால் கைமீறும் செலவுகளைச் சமாளிக்க மற்றவர்களிடம் வாங்கித்தான் ஈடுகட்ட நேரிடுகிறது. இது, அந்த நோயாளிகளையோ அல்லது அவர்களின் குடும்பத்தையோ மீளமுடியாத கடன் வலையில் சிக்கவைத்துவிடுகிறது. இந்தப் பின்னணியில் இந்த ஆய்வு முக்கியத்துவம் உடையதாகும்.   


உலக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு இரண்டாவது முக்கிய காரணமாக புற்றுநோய் இருக்கிறது. கிட்டத்தட்ட 70 சதவீத புற்றுநோய் பாதிப்பு குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளில் காணப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆண்களிடையே வாய் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இவர்களில் 60 முதல் 80 சதவீதம் பேர் முற்றிய நிலையில்தான் புற்றுநோய் சிகிச்சை வல்லுநர்களிடம் செல்கின்றனர். ஆரம்பத்திலேயே சிகிச்சைக்குச் செல்லாமல் விடுவதும் சிகிச்சைச்செலவை சில மடங்கு கூட்டுவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டில் வாய்ப்புற்றுக்கான சிகிச்சைக்கு மட்டும் 2,386 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், விலையில் பெரிய மாற்றம் இல்லாவிட்டால், அடுத்த பத்தாண்டுகளில் 23,724 கோடி ரூபாயை நாடு செலவிடவேண்டும் என்றும் இந்த ஆய்வு முடிவு கணித்துள்ளது. குறிப்பாக, புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் ஆண்டுக்கு 20 சதவீதம் பாதிப்பையும் 250 கோடி ரூபாய் செலவையும் குறைக்கமுடியும் என்றும் மருத்துவ வல்லுநர்களின் கணக்கீடு. புகையிலை மற்றும் பாக்கு உட்கொள்வோர் போன்ற பாதிப்பு வாய்ப்பு உள்ளவர்களிடம் புற்றுநோய் அறியும் சோதனையை நடத்துவது முக்கியமானது. கண்டறியப்பட்ட நோயாளிகளைத் தொடர்ச்சியாக கவனித்துவருவது அதைவிட முக்கியம். புகைப்பதிலிருந்து மீட்பதற்கும் அவர்களுக்கு துணை நிற்பதற்குமான வழிமுறைகளையும் கொள்கைகளையும் அரசாங்கம் உருவாக்கவேண்டும் என்றும் ஆய்வுசெய்த மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.