தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.நீட் ரத்து, புதிய கல்விக்கொள்கையைத் திரும்பப் பெறுதல், இடஒதுக்கீட்டில் மாநிலத்துக்கான முழு உரிமை என ’உரிமைக்குக் குரல் கொடுப்போம்’, என பிரதமர் மோடியிடம் அவர் முன்வைத்த கோரிக்கைகள் இது தமிழகமல்ல, தமிழ்நாடு என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்டும் பேரிகைகளாகவே இருந்தன.
பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சிக்கு இந்த எதிர்க்குரல்கள் புதிதல்ல. இந்தியா ஒன்றிய அரசு என்பதை மத்திய ஆட்சிக்கு நினைவூட்டும் வகையிலேயே இந்தக் குரல்கள் இருந்துவருகின்றன. சிறுவணிகங்களுக்கான கடன் திரும்பச் செலுத்தும் காலத்தை மத்திய அரசை நீட்டிக்கக் கோருவது தொடர்பாக 12 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியது, மத்திய ஆட்சியின் கொடுங்கோன்மையை எதிர்கொள்ள மாநில அரசுகள் கூட்டணியாக இயங்கவேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது, மாநிலங்களுடன் சண்டை பிடிக்காத அவர்களைத் துன்புறுத்தாத மத்திய அரசை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்தது.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் அண்மையில் நிகழ்ந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் மீட்டிங்கில் மாநிலங்களுக்கான பங்குகளில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளைச் சுட்டிக்காட்டியது. இப்படி அடுக்கடுக்கான அரசியல் மாநிலங்களுக்கும் மத்திக்கும் இடையிலான இழுபறி ஆட்டத்தைதான் வெளிப்படையாக வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. மற்றொருபக்கம் மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். 2024 தேர்தலுக்கு இன்னும் மூன்றாண்டுகள் மிச்சமிருந்தாலும் ஒன்றியங்கள் மூன்றாவது அணியாகத் திரள்வதற்கான முன்னேற்பாடுகளா இவை என்கிற சந்தேகத்தை எழுப்புகின்றன.
இந்தியாவின் ஆற்றல்மிக்க பிரதமர் நரேந்திர மோடி என்றால் அவருக்குச் சரிநிகரான ஆற்றலுடன் இந்திய மாநிலங்களின் குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. நாடாளுமன்றம்தான் நாடு என நிறுவும் மத்திய அரசிடம் பிராந்திய அடையாளம் மற்றும் உள்மாநில அரசியலை நினைவூட்டும் பிரதிநிதித்துவமாக இந்த மாநில முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் பி.எஸ்.எடியூரப்பா ஆளும் கர்நாடக மாநிலம் கூட இந்த மாநில அதிகார அரசியலுக்கு விதிவிலக்கல்ல.
மத்திய அரசின் புதிய தடுப்பூசிக் கொள்கை இந்த அதிகாரப்போட்டிக்குச் சிறந்த உதாரணம். மாநிலங்களே இனி நேரடியாகத் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்றது மத்திய ஆட்சி. ஆனால் டெல்லி பஞ்சாப், சத்தீஸ்கர் என அத்தனை மாநிலங்களும் தடுப்பூசிக்குத் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள்தான் இந்தத் திண்டாட்டத்துக்குக் காரணம் என மத்திய அரசு குற்றம் சாட்டியது. ஆனால் மாநில அரசுகளோ தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த உண்மையை மத்திய அரசு தங்களிடம் மறைத்துவிட்டதாக பதில் கணைகளை ஏவிக்கொண்டிருக்கின்றன. இது ஒருபக்கமிருக்க எதிர்தரப்புகளின் மீதான மக்களின் நம்பகத்தன்மையைக் குலைக்கும் வகையில் அரசின் திட்டங்களை எதிர்க்கும் மாநிலங்களை அர்பன் நக்சல்களாக்கி வரும் போக்கும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட 80களில் இந்திரா காந்தி அரசு காஷ்மீரின் ஃபரூக் அப்துல்லா ஆட்சியைக் கலைத்த வரலாற்றின் மீட்சி. அப்துல்லா ஆட்சி கலைக்கப்பட்ட பிறகுதான் ஆந்திராவின் என்.டி.ராமாராவ் தலைமையில் மாநில முதலமைச்சர்கள் ஒன்றிணைந்து இந்திரா அரசுக்கு எதிராகக் களமிறங்கினார்கள். 1984 காங்கிரஸ் ஆட்சி இந்தத் தவறுக்காக பெரும் விலையை கொடுக்க நேர்ந்தது.
இதுபோன்ற மத்திய மாநில அரசுகளின் மோதல் போக்குக்குத் தீர்வாக மாநிலங்களின் நிதித்தேவை மற்றும் பிற உரிமைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இயங்கும் நிதி ஆயோக் அல்லாத தன்னாட்சித் திறன் கொண்ட புதிய நிர்வாக இயந்திரம் காலத்தின் தேவை. ’உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்குக் குரல்கொடுப்போம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது தமிழ்நாட்டின் குரல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாநிலங்களின் குரல் என்பதை ஒன்றியம் உணர்த்துகிறதா?
Also Read: இந்தியாவை திரும்பிப் பார்க்கவைத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் யார்? என்ன செய்தார்கள்?