சமீப காலமாக, ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விஞ்ஞான உலகின் வளர்ச்சியால் மனித இனம் பெரும் பலன்களை அடைந்திருந்தாலும் அதனால் சில பிரச்னைகளும் ஏற்படதான் செய்கிறது. அந்த வகையில், ஆன்லைன் மோசடி என்பது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.  


தொடரும் ஆன்லைன் மோசடிகள்:


அதன் தொடர்ச்சியாக, ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 800க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மொபைல் அப்ளிகேஷனில் முதலீடு செய்ய வைத்துள்ளது ஒரு கும்பல். தற்போது, இந்த மோசடி தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளது சைபர் காவல்துறை.


இந்த சம்பவம் குறித்து விரிவாக விவரித்துள்ள காவல்துறை தரப்பு, "இந்த கும்பல் சமீபத்தில் ஒரு பெண்ணுக்கு அதிக வருமானம் ஈட்டி தருவதாகக் கூறி மொபைல் ஆப்பில் முதலீடு செய்ய வைத்து 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது.
 
டெல்லி திலக் நகரில் வசிக்கும் துஷார் கோஹ்லி (24), வினோத் குமார் பாசின் (35), குருகிராமில் உள்ள கன்ஹாய் கிராமத்தில் வசிக்கும் ராம் குமார் ராமன் மற்றும் உத்தமில் வசிக்கும் 25 வயதான சஹ்லேஷ் குமார் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


குறிவைக்கப்பட்ட பெண்கள்:


DLF கட்டம் III-இல் வசித்து வரும் பாலக் ஸ்ரீவஸ்தவா, தன்னிடம் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாக ஆன்லைன் மொபைல் செயலியின் ஆபரேட்டர்கள் மீது புகார் அளித்திருந்தார். ஸ்ரீவஸ்தவாவை கடந்த ஆண்டு நண்பர் ஒருவர் "பிபி பிஎல்சி" என்ற செயலியில் முதலீடு செய்யச் சொன்னார். அது அதிக வருமானம் தரும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.


அவரும் அவரது தாயும் சுமார் 2.30 லட்சம் ரூபாயை இந்த செயலியில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், அவர் வருமானம் கேட்டபோது அது போலியான திட்டம் என்பதை உணர்ந்திருக்கிறார். மேலும் அதிக பணத்தை முதலீடு செய்யும்படி ஆபரேட்டர்கள் அவர்களிடம் கேட்டனர். இதே மொபைல் அப்ளிகேஷன் மூலம் கிட்டத்தட்ட 1000 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என ஸ்ரீவஸ்தவா புகார் அளித்துள்ளார்.


சைபர் கிரைம் (கிழக்கு) காவல் நிலைய  இன்ஸ்பெக்டர் ஜஸ்வீர் தலைமையிலான போலீஸ் குழு அந்த கும்பலை பிடித்தது. நான்கு பேரை கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம், விசாரணையின் போது பல வழக்குகள் தீர்க்கப்படும் என நம்புகிறோம்" என தெரிவித்தது.


சமீபத்தில், மகாராஷ்டிராவில் இதேபோன்ற சம்பவம் ஒன்று நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: RR vs PBKS, IPL 2023 LIVE: ராஜஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்யும் பஞ்சாப் அதிரடி ரன் குவிப்பு..!