காத்துவாக்குல ஓர் ஆடையணிந்து டெல்லி மெட்ரோவில் பயணித்ததால் விமர்சனங்களுக்கு உள்ளான இளம் பெண் ரிதம் சனானா வெட்டி நியாயம் பேசுவோர் எல்லோருக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.


பத்திரிகைகளுக்கு அவர் கொடுத்த பேட்டியில், "ஆடை என்பது எனது சுதந்திரம். நான் எதை விரும்புகிறேனோ அதையே அணிவேன். நான் இதையெல்லாம் ஏதோ பப்ளிசிட்டி ஸ்டன்ட்டுக்காக செய்வதாக யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. என்னுடைய ஃபேஷன் சாய்ஸ் எல்லாம் உர்ஃபி ஜாவேத்தை காப்பியடிப்பதுபோல் இருப்பதாகவும் விமர்சிக்கின்றனர். அப்படி ஒருவர் இருப்பதே இந்த மெட்ரோ சம்பவத்திற்குப் பின்னர் என்னிடம் என் தோழி காட்டியதாலேயே தெரியும். இருப்பினும் அவரைப் பற்றி தெரிந்த பின்னர் அவர் மீது மரியாதை கொண்டேன். 


அப்புறம் இன்னொரு விஷயம் என்னவென்றால், நான் கடந்த சில மாதங்களாகவே இதுபோல் உடையணிந்துதான் உலா வருகிறேன். இந்த ஆடைத் தேர்வு ஒரே நாளில் செய்து கொண்டதல்ல. என் குடும்பம் ரொம்பவே பழமைவாதம் நிரம்பியது. என்னை எப்போதுமே அவர்கள் என் விருப்பப்படி வாழ விட்டதில்லை. அதனால் இப்போது நான் ஒரு முடிவு செய்து என் விருப்பம்போல் வாழ்கிறேன். என் வாழ்க்கை என் விருப்பம். டெல்லி பிங்க் லைனில் மட்டும் என்னை அனுமதிக்கவில்லை. மற்றபடி எல்லா மெட்ரோ ரயில்களிலும் நான் பயணித்துவிட்டேன். என் குடும்பத்தினருக்கு என் ஆடை முறை பிடிக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் ஒருபடி மேலே சென்று என்னை மிரட்டி வருகின்றனர். ஆனால் ஐ டோன்ட் கேர்" என்றார்.


அன்று நடந்தது என்ன?


டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு ஃபேஷன் இன்ஃப்ளுயன்சர் அரைகுறை ஆடையில் பயணித்தார். அவர் ஒரு இருக்கையில் பெரிய கருப்பு நிற பேக் பேக்குடன் அமர்ந்திருந்தார். அவர் எழுந்து நிற்கும்போதுதான் அவர் இடுப்பில் ஒரு பிகினி மட்டும் அணிந்திருந்தது தெரியவந்தது. சுற்றியிருந்தவர்கள் பலரும் கண்டும் காணாமலும் இருந்தனர். சிலர் இவர் ஜாவேத் ஊர்ஃபியோ என நினைத்து உற்றுப் பார்த்தனர்.  






ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றது தொடங்கி பாலிவுட்டின் ஃபேஷன் சென்சேஷனாக தற்போது வலம் வருவது வரை உர்ஃபி ஜாவேத் தொடர்ந்து லைம்லைட்டில் இருந்து வருகிறார். நடிகை ராக்கி சாவந்துக்குப் பிறகு பாலிவுட்டில் உச்சபட்ச கவர்ச்சியால் கவனமீர்த்து வருபவராக உர்ஃபி ஜாவேத் உருவெடுத்துள்ளார். அந்த ரேஞ்சுக்கு இந்தப் பெண்மணியும் தாராளமாக கவர்ச்சியில் வந்திருந்தாலேயே ஒரு நிமிடம் பயணிகள் எல்லோரும் இவரை உர்ஃபி ஜாவேத் என்று நினைத்துவிட்டனர்.


கோரிக்கை விடுத்த டெல்லி மெட்ரோ:


இளம் பெண்ணின் ஆடை விவகாரம் வீடியோவாக வெளியாக வைரலான நிலையில் இது தொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில் முதன்மை செயல் இயக்குநர் அனுஜ் தயார் கூறுகையில், "டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அதன் பயணிகள் சமூக அந்தஸ்தைப் பேணும் வகையில் கண்ணியமான ஆடை அணிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். மேலும் இதுபோன்ற ஆடைகள் மூலம் சக பயணிகளின் உணர்வுகளை அவமதிக்க மாட்டார்கள் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார். மேலும், டெல்லி மெட்ரோ ரயில் ஆப்பரேஷன்ஸ் மற்றும் மெயின்டனன்ஸ் சட்டத்தின்படி பிரிவு 59ன் கீழ் அநாகரிகமான ஆடை குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.