பழங்குடியினத் தொழிலாளி ஒருவர் மீது பிரவேஷ் சுக்லா என்ற நபர் சிறுநீர் கழிப்பது கேமராவில் சிக்கிய நிலையில், அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவர் செய்த இழிவான செயலின் வீடியோ வைரலாக பரவி, பல கொந்தளிப்புகளை கிளப்பிய நிலையில், சுக்லா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை வந்துள்ளது.
வழக்குப்பதிவு
மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, செவ்வாய்கிழமையன்று அந்த வீடியோ காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது. பிரவேஷ் சுக்லா காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். சுக்லாவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்கள்) மற்றும் 504 (அமைதியை மீறும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
என்ன ஆனாலும் விடமாட்டோம்
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், வைரலான வீடியோவுக்கு எதிர்வினையாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சுக்லா மீது குற்றம் சாட்டுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறியிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு "கடுமையான தண்டனையை" அரசாங்கம் உறுதி செய்யும் என்று சிங் சவுகான் கூறினார். "என்ன ஆனாலும் நாங்கள் அவரை (குற்றவாளியை) விடமாட்டோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவை சேர்ந்தவர்
குற்றம் சாட்டப்பட்டவர் பாஜகவைச் சேர்ந்தவரா என்று கேட்டதற்கு, “குற்றவாளிகளுக்கு ஜாதி, மதம் மற்றும் கட்சி கிடையாது. ஒரு குற்றவாளி ஒரு குற்றவாளி மட்டுமே. அவரை தப்பிக்க விடமாட்டோம். ” என்றார். இதே கருத்தை எதிரொலித்த மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, “அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும், யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
பாஜக எம்எல்ஏ உதவியாளரா?
இந்த வீடியோ வெளியானதை அடுத்து, பாஜக எம்எல்ஏ கேதார் சுக்லாவின் பிரதிநிதி பிரவேஷ் சுக்லா என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இருவரின் புகைப்படத்தை சுக்லா ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். சுக்லாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. கேதார் சுக்லா, குற்றம் சாட்டப்பட்டவர் தனது பிரதிநிதி அல்ல என்றும், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களை தனக்குத் தெரியும் என்பதை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிகிறது. இருப்பினும், பிரவேஷ் சுக்லாவின் தந்தை ரமாகாந்த் சுக்லா, தனது மகன் கேதார் சுக்லாவின் பிரதிநிதி என்று கூறினார். "அவர் பாஜக எம்.எல்.ஏ-வின் பிரதிநிதி, அதனால்தான் அவர் எதிர்க்கட்சிகளால் குறிவைக்கப்படுகிறார். இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடைபெற்று நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று ராமகாந்த் கூறினார்.