கொரோனா பரவலைக் கட்டுபடுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்கள் மீண்டும் பகுதிநேர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. கடந்த ஆண்டைப்போலவே, இந்தாண்டும் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு பண்டிகை கொண்டாடங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 


கேரளா: 


டிசம்பர் 30 முதல் ஜனவரி 2-ஆம் தேதி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கேரளா அரசு தெரிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 


உத்தரகாண்ட் : 


இன்று (டிசம்பர் - 27) முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த உத்தரகாண்ட் அரசு முடிவெடுத்துள்ளது. மருத்துவ அவசரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை தவிர மக்கள் நடமாட்டத்தை அனுமதிக்கப்படும். அடுத்த உத்தரவு வரும் வரையில், இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இம்மாநிலத்தில், ஒமிக்ரான் தொற்றால் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.     


உத்தர பிரதேசம்:


கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால்,உத்தர பிரதேச அரசு கடந்த 25ம் தேதியில் இருந்து இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தி வருகிறது. முன்னதாக, கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, 2022 சட்டமன்றத் தேர்தலை நிறுத்திவைக்க முடியுமா என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்திடம்  கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மிகத் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. 


இதற்கிடையே, பகல் பொழுதில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கொடுத்து, இரவு நேர ஊரடங்கால் எந்த பயனும் இல்லை என்று பாஜக  எம்.பி வருண் காந்தி கூறினார். உத்தரபிரதேச அரசு தனது முன்னுரிமைகளை தெளிவுபடுத்த வேண்டும். மாநிலத்தின் சுகாதார அடிப்படை கட்டமைப்புகள் போதிய அளவில் இல்லை என்பதை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.   


      


கர்நாடகா:


கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த, நாளை முதல் அடுத்த 10 நாட்கள் இரவு நேர ஊரடங்கு  அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் புத்தாண்டு பண்டிகை கொண்டாடங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.  


அசாம்: அசாம் மாநிலத்தில் நேற்றில் இருந்து (26ம் தேதி) இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. டிசம்பர் 31ம் தேதி இரவைத் தவிர்த்து, அனைத்து நாட்களிலும்  இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.       


மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலலங்களைத் தொடர்ந்து டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு  தெரிவித்துள்ளது. 


முன்னதாக, ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கொவிட்-19 நிலவரம் மற்றும் தயார்நிலை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்தது. கூட்டத்தில், தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை விதிக்க வேண்டும் எனவும், பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தாலும், ஆக்சிஸஜன் படுக்கைகளுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தாலும்,  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகம், மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தினார். 


Omicron: பூஸ்டர் டோஸுக்கு தகுதி இருப்பவர்கள் உடனே இதை செய்யுங்கள்.. Dr. பிரப்தீப் கவுர்