கொரோனா மற்றும் ஒமிக்ரான்(Omicron) பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு பயன்படாது என தேசிய பரவு நோயியல் நிறுவனத்தின் (என்.ஐ.இ) துணை இயக்குநருமான டாக்டர் பிரப்தீப் கவுர் தெரிவித்துள்ளார். 






இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், "கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு பயன்போடாது.  மூன்று அடுக்குகளைக் கொண்ட துணி முகக்கவசம் அல்லது சர்ஜிகல் மாஸ்க்-ஐ பயன்படுத்துங்கள். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிருங்கள். இரண்ட கட்ட தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள். தகுதியுள்ள நபர்கள் ஜனவரி 10ம் தேதியில் செலுத்தப்படும்  முன்னெச்சரிக்கை தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார். 






கொரோனா தொற்று பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே, இரவு நேர ஊரடங்கு குறித்து இரண்டு வித மாறுபட்டக் கருத்துக்கள் உலாவுகின்றன. 


உதாரணமாக, கொரோனா இரவில் தான் பரவுமா என்று கோணத்தில் சிலர் கேள்விகளை முன்வைக்கின்றனர். ஆனால், தொற்று பரவல் மேலாண்மையில் இரவு கட்டுப்பாடு என்பது உலகளவில் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. கொரோனா காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை ஒவ்வொருவருக்கும் இது நினைவு படுத்தும் விதமாக அமையும்.மேலும், கட்டுப்பாடுகள் 9 அல்லது 10 மணியில் இருந்து தொடங்குவதால் இதரப் பணிகள் மிகக் குறைவான அளவில் பாதிக்கும் என்ற மாற்றுக் கருத்தும் பதிவு செய்யப்படுகிறது. 


முன்னதாக, ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கொவிட்-19 நிலவரம் மற்றும் தயார்நிலை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்தது. கூட்டத்தில், தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை விதிக்க வேண்டும் எனவும், பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தாலும், ஆக்சிஸஜன் படுக்கைகளுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தாலும்,  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகம், மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தினார்.  


இதற்கிடையே கொரோனா மற்றும் ஒமிக்றான் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. மகாராஷ்டிரா, குஜராத், அசாம் உள்ளிட்ட மாநிலலங்களைத் தொடர்ந்து டெல்லியில் இன்று முதலும், கர்நாடகாவில் நாளை தொடங்கியும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.