காங்கிரஸ் கட்சி ஆளும் சத்திஸ்கர் மாநிலத்தில் மகாத்மா காந்தி குறித்த சர்ச்சைக்குரிய பேச்சுக்காக இந்து மதத் தலைவர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 25 அன்று, சத்திஸ்கரில் நிகழ்ந்த `தரம் சன்சத்’ என்ற இந்து மத நிகழ்ச்சியில் பேசிய இந்து மதத் துறவி காளிசரண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இந்த விவகாரம் தொடர்பாக வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், இந்து மத குருவான காளிசரண், `அரசியல் மூலமாகச் சிறுபான்மையினர் இங்கு அதிகாரம் பெற்றுள்ளனர். இந்த நிலைக்குக் காரணம் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. அவரைக் கொன்ற கோட்சேஜிக்கு வணக்கங்கள்’ என்று மரியாதைக் குறைவாக மகாத்மா காந்தி குறித்து பேசியுள்ளார். 


`அறுவை சிகிச்சை என்பது தேவையானது. இந்தப் பருக்களையும், கொப்பளங்களையும் நீக்காவிட்டால், இவை நாளை புற்றுநோயாக மாறிவிடும். நான் உங்களைக் கலவரம் செய்ய சொல்லவில்லை’ என்றும் காளிசரண் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. 



நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்கள்


 


காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் புகார்களையடுத்து காளிசரண் மீது சத்திஸ்கர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 


இந்தச் சர்ச்சைக்குரிய பேச்சு நடைபெற்ற தரம் சன்சத் ஆன்மிக நிகழ்ச்சியில் காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சத்திஸ்கர் மாநிலத்தின் பாஜக தலைவரும், சத்திஸ்கர் முன்னாள் முதல்வருமான ராமன் சிங் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் பேயர் பிரமோத் துபே அளித்த புகாரின் பெயரில் காளிசரண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சத்திஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மோகன் மர்காம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். 


சத்திஸ்கர் காவல்துறை தரப்பில், `முன்னாள் மேயர் பிரமோத் துபே அளித்த புகாரின் பெயரில், தர்ம சன்சத் நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி குறித்து தவறான சொற்களைப் பிரயோகித்ததால் காளிசரண் மகாராஜ் மீது 505(2), இபிகோ 294 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது’ எனக் கூறப்பட்டுள்ளது. 


சட்டப்பிரிவு 505(2) என்பது பல்வேறு சமூகத்தவருக்கு இடையில் வெறுப்பையும், மோதலையும் தூண்டுமாறு பேசுவதற்குத் தண்டனை அளிக்கிறது. மேலும் சட்டப்பிரிவு 294ன் படி, பொது இடத்தில் ஆபாசமான பாடலையோ, சொற்களையோ பேசுபவருக்குத் தண்டனை அளிக்கப்படுகிறது. 



நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர்கள்


 


இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள சத்திஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல், `மகாத்மா காந்திக்கு எதிரான இந்தக் கருத்துகள் ஏற்கத்தக்கவை அல்ல. இதனைக் கண்டிக்கிறோம். மேலும், சட்டத்தின் அடிப்படையில், அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்’ எனக் கூறியுள்ளார். 


பாஜக தலைவரும், சத்திஸ்கர் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தரம்லால் கௌஷிக், `இந்த நிகழ்ச்சியின் மீது கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. மேலும், துறவிகள் தங்கள் மனதில் பட்டதைப் பேசுவார்கள். நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களே இதற்குப் பொறுப்பு’ எனக் கூறியுள்ளார். 


உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் பகுதியில் மூன்று நாள்கள் நடைபெற்ற வெறுப்புப் பேச்சு நிகழ்ச்சிக்குப் பிறகு, சத்திஸ்கர் மாநிலத்தில் இவ்வாறான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும், இந்து ராஷ்ட்ரம் அமைப்பதற்காக சிறுபான்மையினருக்கு எதிராக ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்ற வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.