பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என 102 வயது மூதாட்டி நடைபயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இன்னும் ஒரு சில வாரங்களில் மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இந்த முறை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் தொடர்ச்சியாக 3வது முறையாக ஆட்சியமைக்க தேவையான திட்டங்களை பாஜக வகுத்து வருவதால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இதனிடையே மோடி மீண்டும் பிரதமராக வேண்டி கர்நாடகாவில் 102 வயது மூதாட்டி ஒருவர் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அங்குள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் ஹனூர் தாலுகாவில் உள்ள மாதேஸ்வரன் மலை சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலமானது. இங்கு தான் மலை மாதேஸ்வரா சாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கர்நாடகா மட்டுமின்றி தென்னிந்தியாவைச் சேர்ந்த மக்களும் வந்து செல்கின்றனர். இந்த கோயிலுக்கு மலை அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வதும் வழக்கம்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டத்தின் திப்தூர் பகுதியைச் சேர்ந்த 102 வயது மூதாட்டியான பர்வதம்மா என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக மகா சிவராத்தியை முன்னிட்டு மாதேஸ்வரா கோயிலுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும் நிலையில் குடும்பத்துடன் பர்வதம்மா மாதேஸ்வரா கோயில் மலை அடிவாரத்துக்கு வந்து மேலே கோயிலுக்கு நடைபயணம் மேற்கொண்டார். தள்ளாத வயதிலும் இந்த பயணம் மேற்கொண்டு வரும் அவரின் வேண்டுதல் என்ன என அங்கு வந்த பக்தர்கள் கேட்டனர். அதற்கு நாட்டு மக்கள் நலமாக இருக்க வேண்டும், மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும், மழைப்பொழிவு இருக்க வேண்டும் என மலை மாதேஸ்வரனிடம் வேண்டுதல் வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடிக்காக 102 வயது மூதாட்டி கோயிலில் வேண்டுதல் செய்த சம்பவம் இணையத்தில் பாராட்டையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளது. அதேசமயம் இந்த வயதில் அடிவாரத்தில் இருந்து மலை உச்சியில் இருக்கு மாதேஸ்வரன் கோயிலுக்கு 18 கி.மீ., நடந்து செல்லும் பர்வதம்மாவின் உற்சாகம் பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளது.
மேலும் படிக்க: Karu Palaniappan: “ராமர் என்னடா செஞ்சாரு? .. ஸ்டாலின் ராஜ்ஜியம் தொடரணும்” - இயக்குநர் கரு.பழனியப்பன் பேச்சு