வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் ராஜ்ஜியம் தொடர வேண்டும் என இயக்குநர் கரு.பழனியப்பன் கூறியுள்ளார்.
முதலமைச்சர் பிறந்தநாள் கூட்டம்
சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாற்றில் எப்படி செப்டம்பர் மாதம் முக்கியமான மாதமோ, அதேபோல் மார்ச் மாதமும் முக்கியமான மாதமாகும். மார்ச் 1 முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள், மார்ச் 3 ஆம் தேதி பேரரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரும் 1968ல் கழகம் ஆட்சி அமைத்த பின் இருவரும் 18 ஆண்டு காலம் கழித்து சந்தித்துக் கொண்ட நாளாகும்.
மார்ச் 7 ஆம் தேதி மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நினைவு நாள், மார்ச் 8 ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும் என சட்டம் இயற்றிய நாள், மார்ச் 10 ஆம் தேதி முதலமைச்சராக 1971 ஆம் ஆண்டு பதவியேற்ற நாள் என ஏகப்பட்ட நிகழ்வுகளை கொண்ட மாதமாகும்.
மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
மத்திய அரசு தமிழ்நாட்டை எவ்வளவு வஞ்சிக்கிறது, வன்மத்தோடு இருக்கிறது. ஆளுநர் போல ஒரு ஆளை இங்கே அனுப்பி தினம் ஒரு தப்பான கருத்தை பரப்புகிறது. இந்த ஆளுநர் எப்படி ஐபிஎஸ் படிச்சாருன்னு முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இந்த நாட்டில் ஊழல் என்பது பணம் அல்ல, அதிகாரம் வர்க்கத்தில் தனக்கு வேண்டியதை செய்ய ஒரு சிஸ்டம் வேலை செய்துக் கொண்டே இருக்கிறது. முதலில் ஆளுநர் போல எத்தனை பேர் ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆக இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
வள்ளலாருக்கு, வள்ளுவருக்கு காவி கட்டுவது ஒரு தலைமுறைக்கான கேடாகும். ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல்லுக்கு ஒன்றும் தெரியாது என சொல்வது தலைமுறைக்கான கேடாகும். இப்படி போன்ற விஷயங்கள் களையெடுக்கப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதிமுக கடந்த 10 ஆண்டுகளில் செய்த கேடுகளை சரி செய்ய தமிழ்நாட்டில் திமுகவுக்கு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதேபோல் முழுமையான இந்தியாவுக்கு இந்த 10 ஆண்டுகளில் பாஜக என்னென்ன கேடெல்லாம் செய்ததோ அதை சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ராம ராஜ்ஜியம் பற்றி கருத்து
தமிழ்நாட்டில் கல்விக்கென்று அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். ஆனால் பிரதமர் மோடி எல்லா மாநிலத்துக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பலகோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். அதில் கல்விக்கென திட்டம் எதுவும் இல்லை. யாரும் இங்கே படித்துவிடக்கூடாது, படித்தால் தெளிவாகி விடுவார்கள் என்பதில் தெளிவாக பாஜக இருக்கிறது. மொத்த இந்தியாவுக்கும் சேர்த்து பார்த்தால் இருமடங்கு அதிகமாக ஆய்வு படிப்பு படிக்கும் பெண்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் திராவிட ஆட்சி தான். இன்னைக்கு திரும்ப திரும்ப ராம ராஜ்ஜியம் என சொல்கிறார்கள். ராமர் பட்டாபிஷேகத்துக்கு அப்புறம் எப்படி ஆட்சி செய்தார் என யாருக்கும் தெரியாது. ராமர் கல்யாணம் பண்ண கதை தெரியும். அம்மா பண்ண சூழ்ச்சியால் காட்டுக்கு சென்றார், ராவணனை கொன்றார் என அனைத்தும் தெரியும். ஆனால் பட்டாபிஷேகம் செய்து அவர் பொறுப்பேற்றதும் செய்த முதல் காரியம் பொண்டாட்டியை சந்தேகப்பட்டு தீயில் இறங்க சொன்னார். ராம ராஜ்ஜியத்துக்கு ஒருகதையும் இல்ல. ராமர் என்னடா செஞ்சாரு.. இந்த தேர்தலில் ஸ்டாலின் ராஜ்ஜியம் தொடர வேண்டும்.