கடந்த  2016-ஆம் ஆண்டில், மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டம், நாட்டிலுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுத் தொடங்கப்பட்டது. பின்னர், இத்திட்டத்தின் இலக்கு 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளாக மாற்றியமைக்கப்பட்டது. 


பிரதமரின் உஜ்வாலா திட்டம் என்றால் என்ன?


இந்த இலக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு 7 மாதங்கள் முன்பே, ஆகஸ்ட் 2019-இல்  எட்டப்பட்டது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதோடு, 2021-22 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 


பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் முதற்கட்டத்தில் கொண்டுவரப்படாத குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாமல் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க அரசு திட்டமிட்டது. இதற்கு உஜ்வாலா 2.0 திட்டம் என்று பெயரிடப்பட்ட இத்திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் தொடங்கிவைத்தார்.


மத்திய அமைச்சரவை எடுத்த அதிரடி முடிவு:


இந்த திட்டத்தின் கீழ் ஒரு எல்பிஜி சிலிண்டருக்கு கொடுக்கப்பட்டு வந்த மானியம் 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக கடந்தாண்டு உயர்த்தப்பட்டது. எல்பிஜி சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம் வழங்குவது 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ள நிலையில், இந்த திட்டத்தை வரும் 2024-25 ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், "பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை 6 முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. எடுக்கப்பட்டுள்ள முதல் முடிவு, நாளை கொண்டாடப்பட உள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான பரிசாக அமைந்துள்ளது.


2024-25 நிதியாண்டில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர் வரை சிலிண்டர் ஒன்றுக்கு 300 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலக்கு மானியத்தை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளோம். வரும் 2025ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை, மானியம் நீட்டிக்கப்படும். இதற்கான மொத்த செலவு 12,000 கோடி ரூபாய் ஆகும்" என்றார்.