ஒடிசாவில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. பாலசோர் நகரில் உள்ள பஹானாகா ரயில் நிலையத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணியில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.


சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ்:


சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதியதால் தடம் புரண்டுள்ளது. இன்று மதியம் 3:20 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து இந்த ரயில் கிளம்பியுள்ளது. அவசர உதவிக்கு 6782262286 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "மேற்கு வங்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ஷாலிமார்-கோரோமண்டல் விரைவு ரயில் இன்று மாலை பாலசோர் அருகே சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இதில், வெளியூர் சென்ற மக்கள் கடுமையாகப் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.


அவசர உதவி எண் அறிவிப்பு:


எங்கள் மக்களின் நலனுக்காக ஒடிசா அரசு மற்றும் தென்கிழக்கு ரயில்வேயுடன் ஒருங்கிணைத்து வருகிறோம். எங்களின் அவசரகால கட்டுப்பாட்டு அறை 033- 22143526/ 22535185 என்ற எண்களுடன் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. உதவிக்கான அனைத்து முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன.


ஒடிசா அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும் 5-6 பேர் கொண்ட குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்புகிறோம். தலைமைச் செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்" என பதிவிட்டுள்ளார்.


விபத்தில் படுகாயம் அடைந்த 132 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசா தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையர் (எஸ்ஆர்சி) மற்றும் மூத்த அதிகாரிகள் ஹேமந்த் சர்மா, பல்வந்த் சிங், அரவிந்த் அகர்வால், டிஜி தீயணைப்பு சேவைகள் ஆகியோர் ரயில் விபத்து ஏற்பாடுகளை மேற்பார்வையிட சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.

 

ஒடிசா செல்லும் தமிழ்நாடு அமைச்சர்:

 

ரயில் விபத்து தொடர்பாக ஒடிசா  முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். சென்னைக்கான அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.  044- 25330952, 044-25330953, 044-25354771 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர், ஒடிசா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், 2009ஆம் ஆண்டிலும் ஒடிசாவில் விபத்துக்குள்ளானது. அதில், 161 பேர் படுகாயமடைந்த நிலையில், 16 பேர் உயிரிழந்தனர்.