கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பு, தீவிர அரசியலில் நுழைந்த மு. கருணாநிதி, கடந்த 1957ஆம் ஆண்டு, முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 1969ஆம் ஆண்டு முதல் முறையாக பதவியேற்ற அவர், வேறு எந்த பிராந்திய தலைவரும் இதுவரை செலுத்திராத செல்வாக்கை தேசிய அரசியலில் செலுத்தி இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தினார்.


தேசிய அரசியலுக்கு அவர் ஆற்றிய முதன்மை பங்கு ஒன்று இருந்தது என சொன்னால், அது நிச்சயமாக இந்திய ஜனநாயகத்தை அவர் வலுப்படுத்திய விதமாகவே இருக்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தை பெயரளவுக்கு மட்டும் இல்லாமல் உண்மையாகவே பிரதிநிதித்துவமாகவும், மதிப்புமிக்கதாகவும், நாட்டின் பிராந்திய, மொழி மற்றும் சமூக பன்முகத்தன்மையை உள்ளடக்கியதாகவும் மாற்றினார்.


தென்னகத்தின் குரலை தேசிய அளவில் ஒலித்த ஒரு சில அரசியல் தலைவர்களில் கருணாநிதியும் ஒன்று. அதுமட்டும் இன்றி, சமூக நீதியை அடிப்படை அரசியல் கொள்கையாய் கட்டமைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய், அரசியல் செயல்பாடுகளில் சாதியை மையப்படுத்தி தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.




ஒரே அரசியல் கொள்கையிலிருந்து வந்த தலைவர்களுடன் இணைந்து, இந்திய அரசு மொழி ரீதியான பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்க செய்தார். மாநில அரசின் அதிகாரங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, கூட்டாட்சி தத்துவத்தை பேசிய முன்னோடி தலைவராக தேசிய அரங்கில் உருவெடுத்தார்.


தேசிய அரசியலில் தேசிய கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், திமுக போன்ற பிராந்திய கட்சிகளையும் நாட்டின் கொள்கையை வடிவமைக்க வைப்பதில் முக்கிய பங்காற்றினார். மத்தியில் ஆட்சியை அமைப்பதிலும், தேசிய அரசியலை செதுக்குவதிலும் மாநில கட்சிகளின் மவுசை உயர்த்தினார்.


அப்படி என்ன செய்தார்..?


தேசிய கட்சிகளை, வடநாட்டின் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் பிராமண கட்சியாக பார்க்கும் பாரம்பரியத்தில் இருந்து வந்த கருணாநிதி, அதற்கு நேர் எதிரான அரசியல் செய்தார். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ஒன்று திரட்டி, திமுகவை சமூக இயக்கமாக மாற்றியதில் கருணாநிதியின் பங்கு இன்றியமையாதது. 


காங்கிரஸ் கட்சி, ஜவஹர்லால் நேரு போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்களால் வழிநடத்தப்பட்டாலும், சாதி ரீதியான, மொழி ரீதியான பிரச்னைகளுக்கு அக்கட்சி முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற புகார் ஏழாமல் இல்லை. நேருவை விட அவருக்கு பின் வந்த தலைவர்கள், இந்த விவகாரத்தில் கடும் குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேர்ந்தது. இதைதான், கருணாநிதியும் திராவிட இயக்க தலைவர்களும் அடிகோலிட்டு காட்டினர்.


கடந்த 1965ஆம் ஆண்டு, ஹிந்தியை மட்டுமே மாநில ஆட்சி மொழியாக திணிக்கும் முயற்சி நடந்தபோது, ​​போராட்டங்களில் முன்னணியில் நின்றது தி.மு.க. இதனால், மத்திய அரசு பின்வாங்க வேண்டியிருந்தது. உண்மையை சொல்லப்போனால், இந்தியா போன்ற மொழியியல் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒரே மொழியை திணிக்கும் முயற்சி வெற்றியடையாது. 1960களில் இறுதியில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக கருணாநிதி பதவியேற்பதற்கு, அவர் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஆற்றிய பங்கு முக்கிய காரணியாக மாறியது.


இந்திய அரசியலமைப்பின் கீழ் தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டு மக்கள் வரை சென்று சேர்வதற்கு கருணாநிதி போன்ற தலைவர்களே காரணம். பிற்படுத்தப்பட்ட சமூகம், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறி, அதிகார மையமாக மாறுவதில் கருணாநிதி போன்ற தலைவர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இட ஒதுக்கீடு உரிமையை பெறுகின்றனர் என்றால், அதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடும், அங்கு நடந்த அரசியல் மாற்றமும்தான்.


தமிழ்நாட்டில் சமூக நல திட்டங்களை அறிமுகப்படுத்தியவர் காங்கிரஸ் கட்சியின் காமராஜர் என்றாலும், அதை தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர்கள் கருணாநிதியும் அதற்கு பின் வந்த தலைவர்களும்தான். குறிப்பாக, சமூக நல திட்டங்களை அரசின் முக்கிய செயல் திட்டமாக மாற்றியதில் கருணாநிதி பங்கு குறிப்பிடத்தக்கது.


இவற்றை கருணாநிதி மட்டுமே செய்யவில்லை என்றாலும், சாதி ரீதியான மொழி ரீதியான பிரச்னைகளை, தேசிய அளவில் அரசியல் விவகாரமாக மாற்றியதில் கருணாநிதியின் பங்கு முக்கியம்.




இந்திய கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தியவர்:


தனது மாநிலத்தில் செல்வாக்கு செலுத்தியது மட்டும் இன்றி, மத்தியிலும் பிராந்திய தலைவர்களின் முடிவுகள் எதிரொலிக்க செய்த வெகுசில தலைவர்களில் கருணாநிதியும் ஒன்று. இந்திரா காந்தியின் வங்கி தேசியமயமாக்கல் நடவடிக்கையை ஆதரித்த போதிலும்,  அவசரநிலையை கடுமையாக எதிர்த்தார். இதற்கான விலையாக, கருணாநிதி தலைமையிலான திமுக அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. மேலும் திமுக தொண்டர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர்.


இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை வழங்க வழிவகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வி.பி.சிங் முடிவு செய்ததால், தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார் கருணாநிதி.




கடந்த 1996 மற்றும் 1998 க்கு இடையில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் திமுக முக்கிய சக்தியாக இருந்தது. பின்னர், 1999 முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2004க்குப் பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்தார். பலர் அதை சந்தர்ப்பவாதமாகப் பார்த்தார்கள். ஆனால், இது கருணாநிதியின் அரசியல் சாதுர்யத்தை காட்டுகிறது. தேசிய அரசியலில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்த இது உதவியது.


மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்திலிருந்து, தற்போது போதுமான பிரதிநிதித்துவம் கூட கிடைக்கால அளவுக்கு நிலைமை மாறி இருப்பது கருணாநிதி போன்ற தலைவர்கள் விட்டு சென்ற வெற்றிடத்தையே சுட்டிக்காட்டுகிறது.