அரசுமுறை பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதி ஆணையம் மற்றும் உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.


மேலும், ஜி - 20 நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர், ஜப்பான், சவுதி அரேபியா, தென் கொரியா, ஆஸ்திரேலியா நாடுகளுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை போன்ற நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.


மேலும், அமெரிக்க - இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு வர வேண்டும் என அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஜேனட் யெல்லனை சந்தித்து அழைப்பும் விடுத்துள்ளார்.


உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 


இந்த சந்திப்புக்குப் பிறகு, வாஷிங்டன் ப்ரூக்கிங்ஸ்  நிறுவனத்தில், “இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு” எனும் தலைப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, "வரும் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளவுள்ள முக்கிய பிரச்னைகளில் முதன்மையாக இருப்பது, எரிசக்தியின் விலை மற்றும் அதனை பெறுவதில் உள்ள சிக்கல்.


மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மற்றும் அவற்றை பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இதன் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இந்தியா போன்ற பல நாடுகளுக்கான வளர்ச்சி கணிப்புகள் என்பது குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. 


ஆனால், கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரம் வேகமாகவே மீண்டு வருகிறது" என அவர் பேசியுள்ளார். 


தொடர்ந்து அவர் பேசுகையில், "பொது முதலீடு, தென்மேற்கு பருவமழை, திறன் பயன்பாட்டில் முன்னேற்றம், வலுவான கார்ப்பரேட் இருப்பு நிலைகள், உற்சாகமான நுகர்வோர் மற்றும் வணிக நம்பிக்கை மற்றும் குறைந்து வரும் அச்சுறுத்தல் ஆகியவற்றால் இந்தியா தனது வளர்ச்சிப் பாதையை உருவாக்கி தனது பொருளாதாரத்தினை கட்டமைத்து வருகிறது.


அதேபோல், பல துறைகள் இப்போது தொற்றுநோய்க்கு முந்தைய செயல்பாட்டு அளவைத் தாண்டிவிட்டது, தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா பின்தங்கிய நிலையில் உள்ளது, ஆனால் தொற்று பரவால் ஏற்பட்ட இடைவெளியில் இருந்து மிகவும் வேகமாக முன்னேறி வருகிறது" எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். 


மேலும் அவர் மிகவும் குறிப்பிட்டு பேசியதாவது, ”முன்னேறிய நாடுகள் தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை முடிவுகளால் ஏற்பட உள்ள உலகளாவிய தாக்கத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். அதேபோல், நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் விதிக்காமல் இருக்க வேண்டும்.


ரூபாய் நாணயத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க இந்தியா பல நாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் நோக்கம் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் வலுவானதாக மாற்றுவது தான். அதற்கான நிதி உள்ளடக்கம் , டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்டவை தயாராக உள்ளது" என  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.




Watch video : சாலை பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ ! கண்டு கொள்ளாமல் சென்ற அதிகாரிகள் !