இந்தியா முழுவதுமே குண்டும் குழியுமான சாலைகளுக்கு பஞ்சம் கிடையாது. அதிலும் மழைக்காலங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. பகட்டாக நின்றுக்கொண்டிருந்த சாலைகளும் கூட , ஒரு நாள் கனமழைக்கே தாங்காமல் அடித்துச் செல்லப்படும் காட்சிகளையும் நாம் கண்டிருக்கிறோம் .  இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களில் மட்டும்தான் இந்த நிலை என்பதல்ல. சென்னை , பெங்களூர் , மும்பை போன்ற பெருநகரங்களிலும் இப்படியான சம்பவங்கள் பதிவாகி வருவதை பார்த்திருக்கிறோம்.


இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் பகுதியில் ஆட்டோ ரிக்‌ஷா ஒன்று  ஒழுங்கற்ற சாலைகள் காரணமாக பயணிகளுடன் கவிழ்ந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் மழைநீர் தேங்கிய முக்கிய சாலை , குண்டும் குழியுமாக இருப்பதையும் அதில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாகன ஓட்டிகள் செல்வதையும் காட்டுகிறது,   மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் வாகனங்களும் வருகின்றன. எதிரே அடுத்தடுத்த வாகனங்கள் வருவதை கண்டதும் , 4, 5 பயணிகளுடன் வந்த ஆட்டோ ஓட்டுநர் வழிவிட்டு ஓட்டுவதற்காக வாகனத்தை சற்று இடதுபுறமாக வளைக்க, குண்டும் குழியுமாக இருந்த சாலையில், ஆட்டோ பயணிகளுடன் பள்ளத்தில் சரிந்துவிட்டது. 


 






உடனே அங்கு சுற்றியிருந்த பொதுமக்கள் ஓடிச்சென்று பயணிகளை மீட்டுள்ளனர். இதில் அவலம் என்னவென்றால் எதிரே வந்த  மாவட்ட ஆட்சியர் , காவல் கண்காணிப்பாளர் என அதிகாரிகளின் வாகனம் ஒன்றுக்கூட இவர்களை கண்டுக்கொள்ளாமல் கடந்து போவதுதான். இந்த வீடியோ ட்விட்டரில் அரவிந்த் என்பவரால் பகிரப்பட்டிருக்கிறது. இதற்கு கீழே நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்கத்தினை பதிவு செய்து வருகின்றனர்.















சிலர் ”ஒரு அதிகாரி கூட தனது வாகனத்தை நிறுத்தவில்லை ” , “ இதிலிருந்து என்ன தெரிகிறது , உங்களுக்கு ஆபத்து வரும்பொழுது எந்த ஒரு அதிகாரிகளும் வரமாட்டார்கள் ..உதவி செய்வது போல காட்டுவது எல்லாம் பகட்டிற்காகத்தான்.. அரசை நம்புவதில் பயனில்லை “ என தங்கள் ஆதங்கங்களை பகிர்ந்து வருகின்றனர்.