நவராத்திரி தசரா கொண்டாட்டங்களுக்குப் பிறகு, பல புராணக்கதைகளை நினைவுகூரும் தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. விளக்குகளின் பண்டிகை என்று அழைக்கப்படும் இதனை மக்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுகிறார்கள்.


இந்தியாவில் இது போன்ற ஒரு குறிப்பிடத்தக்க சந்தர்ப்பமாக, தீபாவளி நாடு முழுவதும் பல இடங்களில் பல்வேறு வழிகளில் அனுசரிக்கப்படுகிறது. தீபாவளியின் போது நீங்கள் சுற்றுலா செல்லும் ஐடியாவில் இருந்தால் அதற்கான சுவாரஸ்யமான இடங்கள் இங்கே உள்ளன.


1. அயோத்தி
இந்து மதத்தினரின் ஏழு புனித நகரங்களில் ஒன்று.உத்தரபிரதேசத்தில் சரயு நதிக்கரையில் அமைந்துள்ளது அயோத்தி நகரம். இது ராமர் பிறந்த இடம் என்று கூறப்படுவதால், இந்து புராணமான ராமாயணத்தில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. அயோத்தி தீபாவளி பண்டிகையை இணையற்ற சிறப்போடு கொண்டாடுவதற்கு பெயர் பெற்றது. அயோத்தியின் போக்குவரத்து இல்லாத பாதைகள், பல்வேறு மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கோயில்கள் உள்ளன, அவை மிகவும் கவர்ச்சிகரமானவை. சுவாரஸ்யமாக, 2018 ஆம் ஆண்டில் சரயு நதிக்கரையில் தீபாவளிய்யையொட்டி 3 லட்சத்திற்கும் அதிகமான களிமண் விளக்குகளை ஏற்றி அயோத்தி நகரம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது.


2. ஜெய்சால்மர்


ராஜஸ்தானில் அமைந்துள்ள ஜெய்சால்மர் பாலைவனத்திற்காக நன்கு அறியப்பட்டாலும் அங்கு தீபாவளி அதன் சொந்த பாணியில் கொண்டாடப்படுகிறது. தீபாவளியன்று நகரம் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலிக்கும். குறிப்பாக தீபாவளிக் காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஜெய்சால்மருக்கு வருகிறார்கள். இந்த நேரத்தில் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.இந்த ஊர் புகழ்பெற்ற ஒட்டகச்சவாரிகளுக்கும் பெயர்போனது.ஜெய்சால்மர் என்பது இந்தியாவின் பாலைவன கலாச்சாரத்தின் அடையாளம் என்று சொன்னால் அது மிகையல்ல. 




3. புஷ்கர்
பலர் ஹோலி கொண்டாட புஷ்கருக்கு பயணம் செய்கிறார்கள், ஆனால் அவர்கள் இந்த நகரத்தின் தீபாவளி நிகழ்வுகளையும் தவறவிடக்கூடாது. புஷ்கர் வனப்பகுதி, மணல் திட்டுகள், ஏரிகள் மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஆன்மீகமும் கம்பீரமும் இந்த இடத்தை சுற்றுலாவிற்கு இனிமையானதாக ஆக்குகிறது. புஷ்கர் ஏரியில் நீராடுவதும், நாட்டில் உள்ள ஒரே பிரம்மா கோயிலுக்குச் செல்வதும் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நிகழும் அற்புதம்.


தீபாவளியின் போது புஷ்கருக்கு வருகை தருபவர்கள் ​​ஹவேலி தீபாவளியையும், 50,000 ஒட்டகங்கள் வரிசையில் பளிச்சென்ற வண்ணங்களில் போர்வை உடுத்திக் மகிழ்ச்சிகரமான அணிவகுத்து வரும் ஒட்டக கண்காட்சியையும் காணலாம்.



4. குஜராத்
குஜராத் சமகால சிந்தனை மற்றும் பண்டைய பழக்கவழக்கங்களின் தொகுப்பாகும். ரான் ஆஃப் கட்ச் நிலப்பரப்பின் அழகியல் ஒருபக்கம் என்றால் அதே நேரத்தில் கிர் தேசிய பூங்காவின் வளமான தாவரங்கள் மறுபுறம் கண்களுக்கு விருந்து அளிக்கிறது. ஒருபுறம் மாண்ட்வி மற்றும் துவாரகாவில் நீண்ட விரிந்த கடற்கரைகளும் மறுபுறம் வதோதராவின் கம்பீரமான கோட்டைகளும் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கின்றன. 


குஜராத்தில், தீபாவளி ஒரு வருடத்தின் முடிவையும் மற்றொரு வருடத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. மாநிலத்தில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஐந்து நாட்களும், ரங்கோலி வரையப்படுகிறது, மேலும் வீடுகள் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன. இசைக்கச்சேரி ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன, மேலும் பழங்குடி பாணியிலான விழாக்களும் இந்தப் பகுதியில் பிரபலம். குஜராத்திகளுக்கு தங்கத்தை பரிசாக வழங்குவது குறிப்பிடத்தக்க சடங்கு. சமோசா மற்றும் ஆலு டிக்கி போன்ற சுவையான உணவுகள் தயாரிக்கப்பட்டு வீடுகளில் தீபாவளிக்காகப் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.