PFI  எனும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், பணியாளர்கள் மேலும் சில அமைப்புகளுடன் இணைந்து, முஸ்லீம் இளைஞர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களில்  சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என NIA  எனும் தேசிய புலனாய்வு முகமை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை இதுவரை தமிழகத்தில் மட்டும் 11 பேரை அதிரடியாக கைது செய்து, முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது. 


இதுகுறித்து என்.ஐ.ஏ வெளியிட்ட தகவலில் “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத செயல்களை செய்வதற்கும் ஆயுதங்களை பெறுவதற்கும் இந்தியாவிற்குள்ளும் வெளிநாட்டிலிருந்தும் சதி செய்து நிதி திரட்டியுள்ளனர்”  எனத் தெரிவித்துள்ளது. 






இதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கையில், “சதித்திட்டத்தை பின்பற்றி, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், ஆயுதங்களைப் பயன்படுத்தி பயங்கரவாத செயல்களுக்கு ஆயத்தமாகும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொது மக்களின் மனதில் பயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர். என என்ஐஏ தெரிவித்துள்ளது. இந்த வழக்கில், உள்துறை அமைச்சகத்தின் (MHA) வழிகாட்டுதலின்படி கடந்த ஏப்ரல் 13 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்திய குற்றவியல் சட்டம், 1860 இன் பிரிவுகள் 120 மற்றும் 153A மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் பிரிவுகள் 17, 18, 18B, 20, 22B, 38 மற்றும் 39 ஆகியவற்றின் கீழ் பல பிஎஃப்ஐ தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தோர், முஸ்லீம் இளைஞர்களை  ஐஎஸ்ஐஎஸ் போன்ற தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதாகவும் தேசிய புலனாய்வு முகமை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 


கல்லூரி பேராசிரியரின் கையை வெட்டுதல், முக்கிய நபர்களைக் கொலை செய்தல், முக்கிய இடங்களை வெடி வைத்து தகர்த்தல், வெடிபொருட்கள் சேகரிப்பு போன்ற வன்முறையை கலந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தும் செயல்களில் இந்த அமைப்பைச் சேர்ந்தோர் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகமை குற்றம்சாட்டியுள்ளது. 


பிஎஃப்ஐ அமைப்பின் முன்னணி தலைவர்களில் ஒருவரான யாசிர் அராபத் என்ற யாசிர் ஹசன் மற்றும் எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்ட மற்றவர்களும், தங்கள் அமைப்பைச் சேர்ந்தோருக்கும் மற்றவர்களுக்கும்  பயங்கரவாதச் செயல்களைச் செய்ய பயிற்சி அளித்துள்ளதாகவும்,  குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஏற்படுத்தும் சதிச் செயலில் ஈடுபட்டதாகவும் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.  


கடந்த சில தினங்களாக இந்தியா முழுவதும் தேசிய புலனாய்வு முகமையால் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இதுவரை பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மேற்கு வங்காளம், பீகார் மற்றும் மணிப்பூர் ஆகிய 15 மாநிலங்களில் 93 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சோதனையின் போது, கைதுகள் மட்டுமல்ல, பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.