காதலின் சின்னமாம் தாஜ்மஹாலை கொண்ட ஆக்ரா நகரில் தனது காதலியுடன் இருந்த ஆண் ஒருவரை பெண் ஒருவர் செருப்பால் அடித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன. காதலனும், காதலியும் சேர்ந்திருந்தால் இத்தனை கொடுமை செய்வார்களா? என்று உணர்ச்சிவசப்படாதீர்கள். அடிவாங்கிய ஆண் கணவர், அடித்த பெண் மனைவி. அருகிலிருந்த பெண் கணவரின் காதலி. அப்புறம் அடி விழும் தானே.
திருமணத்தைத் தாண்டிய உறவு சைபர் காலத்தில் தான் அதிகம் என்று சொல்ல முடியாது அந்தக் காலத்திலும் எந்தக் காலத்திலும் இது போன்ற உறவுகள் இருந்துதான் இருக்கின்றன. அதனால் தான் களவு, கற்பு என்றெல்லாம் இலக்கியங்களில் பேசப்பட்டது. சரி நாம் தற்காலக் கதைக்கு வருவோம்.
கெஞ்சிய கணவர்:
அடி உதவுவது போல் அண்ணன் தம்பிகூட உதவ மாட்டார்கள் என்பார்கள். அப்படித்தான் அவருக்கும் நேர்ந்தது போல். அந்தப் பெண் அடிக்க அடிக்க மன்னித்துவிடு இனி இப்படி நடக்காது என அந்தக் கணவர் கெஞ்சுகிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் கர்மா ஒரு பூமாராங். அது பலமாக அடிக்கும் என கிண்டலாகப் பதிவு செய்துள்ளனர். அவர் அடி வாங்கியதும் அதற்கான நெட்டிசன்கள் ரியாக்ஷனும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருமணத்தை தாண்டிய உறவு: சட்டம் என்ன சொல்கிறது?
திருமணத்தைத் தாண்டிய உறவை கிரிமினல் குற்றமாகக் கருதும் இந்திய தண்டனைச் சட்டம் 497வது பிரிவை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது . இந்த அதிரடியான நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்புகளிலிருந்து பாராட்டுகள் குவிந்தாலும், ஆங்காங்கே எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பின. இந்த சட்டம் ரத்தானதால் தகாத உறவுகள் அதிகரித்து, குடும்பச் சூழல் சிதைந்து கலாச்சாரச் சீரழிவு அதிகரிக்கும். என்று சிலர் போர்க்கொடியும் தூக்கினார்கள்.
உண்மையில் அந்த சட்டம் ரத்தானதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மனைவி என்பவள் கணவனின் உடைமை, கணவனின் உடைமையை இன்னொருவன் பயன்படுத்தும்போது அவனைத் தண்டிக்கலாம் என்று அந்தச் சட்டம் சொல்லியது. அதே நேரத்தில் கணவன் வேறொரு பெண்ணுடன் உறவுகொண்டால், அந்தப் பெண்ணின் மீது வழக்குத் தொடுக்கிற உரிமை மனைவிக்குக் கிடையாது. கணவன் மீதும் வழக்குத் தொடுக்க முடியாது. எந்த வகையிலும் பெண்களுக்கு சம உரிமையோ, பாதுகாப்போ அதில் இல்லை.
பெண் ஒரு சொத்தாக, உடைமையாக பாவிக்கப்பட்டதால்தான் அந்த சட்டமே உருவானது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சமத்துவம் இல்லாத இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு சாசனத்துக்கே புறம்பானது என்று இதை ரத்து செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். அவ்வளவுதான். இந்தச் சட்டத்தை ரத்து செய்ததால் திருமணத்தை மீறிய உறவை உச்சநீதிமன்றம் அங்கீகரிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனக் கூறுகின்றனர் சட்ட வல்லுநர்கள்.